Share via:
கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்விக்கு பாஜகவே காரணம் என்று சொல்லி கூட்டணியில் இருந்து வெளியே வந்தார் எடப்பாடி பழனிசாமி. அதன் பிறகு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக இல்லாமல் தேர்தலில் நின்று வாஷ் அவுட் ஆனார்.
அதன் பிறகு பாஜகவுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று அறிவித்தார். இந்நிலையில் திடீரென டெல்லிக்குப் போன எடப்பாடி பழனிசாமி மூன்று கார் மாறிச்சென்று அமித்ஷாவை சந்தித்தார். எடப்பாடியை அருகில் வைத்துக்கொண்டு அமித்ஷா கூட்டணி அறிவிப்பை வெளியிட்டார். அப்போது எடப்பாடி பழனிசாமி கூட்டணி குறித்து எதுவுமே பேசவில்லை.
அதன் பிறகு அமித்ஷா ஒவ்வொரு பேட்டியிலும் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என்று சொல்லிவருகிறார். அதையே எடப்பாடி பழனிசாமி, ‘கூட்டணி ஆட்சி அமைக்கும் என்பதையே அமித்ஷா அப்படி சொல்லிவருகிறார்’ என்று சமாதானம் செய்துவருகிறார். ஆனால், அமித்ஷாவும் எடப்பாடியும் ஒரே விஷயத்தையே மீண்டும் மீண்டும் பேசி வருகிறார்கள்.
அதிமுகவை பாஜக விழுங்கிவிடும் எச்சரிக்கையாக இருங்கள் என்று ஸ்டாலின் தொடங்கி கம்யூனிஸ்ட் வரையிலும் தொடர்ந்து எச்சரிக்கை செய்துவருகிறார்கள். அதற்கு எடப்பாடி, ‘நீங்கள் பாஜகவுடன் கூட்டணி வைத்த நேரத்தில் திமுகவை பாஜக விழுங்கிவிட்டதா?’ என்று கேள்வி கேட்கிறார். அதேநேரம் கூட்டணி ஆட்சி என்று மீண்டும் மீண்டும் சர்ச்சையைக் கிளப்பும் பாஜகவை அமைதிப்படுத்த எடப்பாடி பழனிசாமியால் முடியவில்லை. இதைப் பார்க்கும்போது அனகோண்டா பாம்பு எனப்படும் பாஜக பிடியில் எடப்பாடி சிக்கியிருப்பது உண்மையாகிறது. ஆனாலும், தன்னை அந்த பாம்பு எதுவும் செய்யாது என்று நம்புகிறார்.
தேர்தல் நெருக்கத்தில் பாஜக பிடியில் இருந்து தப்பி விஜய்யுடன் சேர்ந்துவிடுவார் என்று சொல்கிறார்கள். விஜய் கூட்டணிக்குத் தயாராக இருந்தாலும் பாஜக கூட்டணியை மீண்டும் உடைக்கும் தைரியம் எடப்பாடி பழனிசாமிக்கு இருக்குமா என்பதை விரைவில் பார்த்துவிடலாம்.

