Share via:
முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்துவதற்காக சென்ற அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் சிலர் அவமரியாதையாக நடந்து கொண்ட சம்பவம் தொண்டர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது.
ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் முத்தராமலிங்கத் தேவர் ஜெயந்தி, குருபூஜை விழாவை முன்னிட்டு தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து கட்சித் தலைவர்களும் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் நினைவிடத்திலும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அந்தவகையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மதியம் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்துவதற்காக வந்திருந்தார். அப்போது முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செலுத்த வரிசையில் நின்று கொண்டிருந்த அவரை பார்த்து சிலர், கடந்த ஆண்டு மரியாதை செலுத்த வராதவர், இப்போது ஏன் வந்திருக்கிறார்? என்றும், வரப்போகும் மக்களவைத் தேர்தலை கவனத்தில் கொண்டே பழனிசாமி, இப்போது பசும்பொன் வந்திருக்கிறார் என்று கண்டனக் குரல் எழுப்பினார்கள். அதிலும் சிலர் குறிப்பாக வி.கே.சசிகலாவுக்கு துரோகம் செய்த பழனிசாமி என்றும் குரல் எழுப்பியதால் அப்பகுதியில் அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.