Share via:
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு வருகிற 27ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) விழுப்புரம், விக்கிரவாண்டி வி சாலையில் மிகவும் கோலாகலமாக நடைபெற உள்ளது. இம்மாநாட்டிற்கு கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் வரக்கூடாது என்று அக்கட்சியின் தலைவர் விஜய் அன்புக்கோரிக்கை வைத்துள்ளார்.
தீபாவளி பண்டிகைக்கு 3 நாட்கள் முன்னதாக மாநாடு நடைபெற உள்ளது என்பதாலும், இது மழைக்காலம் என்பதாலும் தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் மேற்கொள்ள விஜய் உத்தரவிட்டுள்ளார். அதன்படி பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் உத்தரவுப்படி கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பம்பரம் போல பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆரம்பத்தில் த.வெ.க. முதல் மாநாட்டிற்கான அனுமதி இழுத்தடிக்கப்பட்டதும், மறுக்கப்பட்டதும் பல சர்ச்சைகளை கிளப்பியது. தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தும், விஜய்க்கு ஆதரவாக தி.மு.க. எதிர்த்து குரல் கொடுத்தார்.
இந்நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, த.வெ.க. தலைவர் விஜய்குறித்தும் அவரது கட்சியின் முதல் மாநாடு குறித்தும் செய்தியாளர்கள் சந்திப்பில் மனம் திறந்து பேசியுள்ளார்.
அவர் பேசும்போது, திரையுலகில் விஜய் முன்னணி நடிகராக இருக்கிறார். அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அவரும் தற்போது பொது சேவை செய்ய வேண்டும் என்று விரும்பி கட்சி தொடங்கியுள்ளார். தமிழக வெற்றிக்கழக மாநில மாநாடு வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் விஜய் பொதுக்கூட்டத்திற்கு மட்டுமல்லாமல், அ.தி.மு.க. போராட்டங்களுக்கும் தி.மு.க. அரசு அனுமதி மறுத்துள்ளது என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி பேசியது குறிப்பிடத்தக்கது.