டங்ஸ்டன் சுரங்கத்தை தடுத்து நிறுத்தியதாக தொடர் போராட்டம் முடிவுக்கு வந்த நிலையில், போராடிய ஒவ்வொரு கட்சிக்கும் தனித்தனியே பாராட்டு விழா நடத்தப்பட்டு வருகிறது. எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அடுத்து மத்திய அமைச்சருக்கு நாளை பாராட்டு விழா நடப்பதாக அண்ணாமலை அறிவிப்பு செய்திருக்கிறார்.

குடியரசு தினத்தன்று கவர்னரின் டீ பார்ட்டியை புறக்கணித்துவிட்டு டங்ஸ்டன் பாராட்டு விழாவில் கலந்துகொண்டார் முதல்வர் ஸ்டாலின். இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை சென்னை, பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் டங்ஸ்டன் சுரங்கத்தால் பாதிக்கப்பட இருந்த பகுதிகளான அரிட்டாபட்டி, வல்லாலபட்டி, நாயக்கர்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் சந்தித்து, வாழைத் தார், பழங்கள், விதை நெல்மணிகள் ஆகியவற்றை வழங்கியும், விவசாயிகளின் அடையாளமான பச்சைத் துண்டு மற்றும் முண்டாக அணிவித்தும் தங்கள் நன்றியைத் தெரிவித்தனர். அதோடு மேலூர் தொகுதி மக்கள் சார்பில் பாராட்டு விழா நடத்துவதற்கான தங்கள் விருப்பத்தினைத் தெரிவித்து, தாங்கள் நடத்தும் பாராட்டு விழாவிற்கு வரவேற்று, மேலூருக்கு வருகை தருமாறு கேட்டுக்கொண்டனர். இந்த வாரம் பாராட்டு விழா நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

இந்நிலையில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, ‘’டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதைக் கைவிடுவதாக, மத்திய அரசு அறிவித்ததை அடுத்து, பொதுமக்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கும், சுரங்கத்துறை அமைச்சர் கிஷண் ரெட்டிக்கும் நன்றி தெரிவித்தனர். கிராம மக்கள் பிரதிநிதிகள் குழு, நமது மாண்புமிகு மத்திய சுரங்கத்துறை அமைச்சரை தங்கள் கிராமத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தனர். தன்னரசு மத்தம் மேலநாடு பொதுமக்கள் மற்றும் அம்பலகாரர்களின் அன்பான அழைப்பை ஏற்றுக்கொண்ட நமது மாண்புமிகு மத்திய அமைச்சர் நாளை, மதுரை அ.வல்லாளப்பட்டிக்குச் சென்று பொதுமக்களை நேரில் சந்திக்கவிருக்கிறார்’’ என்று தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமிக்கு முன்பாகவே அமைச்சர் கிஷண் ரெட்டிக்கும் அண்ணாமலைக்கும் பாராட்டு விழா நடக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link