Share via:

இந்தியாவிலேயே அதிகமான சொத்து வக்பு வாரியத்திடம் இருக்கிறது என்பதால்
அவற்றை நிர்வகிக்க சட்டத்திருத்தம் கொண்டுவந்துள்ளது பா.ஜ.க. அரசு. மக்களவையில் ஆளும்
தரப்புக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் விடிய விடிய நடந்த காரசார விவாதத்துக்கு
பிறகு வக்பு திருத்த மசோதா நிறைவேறியது. இதற்கு ஆதரவாக 288 பேரும், எதிராக 232 பேரும்
வாக்களித்தனர்.
இந்தியாவில், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ளூர் மட்டத்தில் வக்பு
வாரியங்கள் உள்ளன. அவை வக்பு சொத்துக்களை நிர்வகிக்கின்றன. வக்பு வாரியத்திடம் மொத்தம்
9.4 லட்சம் ஏக்கர் நிலமும் 8.7 லட்சம் சொத்துகளும் உள்ளன. இந்த சொத்துகளின் மொத்த மதிப்பு
சுமார் 1.2 லட்சம் கோடி ரூபாய். இது இந்தியாவின் மிக அதிகமான சொத்துகள் கொண்ட அமைப்புகளில்
ஒன்றாகும்.
திருத்தப்பட்ட வக்பு மசோதாவை தாக்கல் செய்த அமைச்சர் கிரண் ரிஜிஜு: வக்பு சட்ட
திருத்த மசோதாவை மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவையில்
நேற்று மதியம் 12 மணிக்கு தாக்கல் செய்தார். அப்போது எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு
தெரிவித்து கோஷம் எழுப்பினர். எனினும், அமைச்சர் கிரண் ரிஜிஜு மசோதா மீதான விவாதத்தை
தொடங்கி வைத்து பேசினார்,
வக்பு திருத்த மசோதாவுக்காக அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக்
குழுவுக்கு, 92.27 லட்சத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் நேரடியாகவும் இணையவழியிலும் குவிந்தன.
அவை ஒவ்வொன்றையும் ஆராய்ந்து அதன் அடிப்படையில் அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. மாநிலங்கள்
மற்றும் யூனியன் பிரதேசங்களின் வக்பு வாரியங்கள் மட்டுமல்லாது 284 குழுக்கள் தங்கள்
கருத்துகளை தெரிவித்தன். அதன் அடிப்படையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மசோதா ‘உமீது’ மசோதா என பெயர் மாற்றப்படும். (Unified
Waqf Management Empowerment, Efficiency and Development (UMEED) Bill). அனைத்து மத
அமைப்புகளையும் அவற்றின் சுயாட்சியையும் அரசு மதிக்கிறது. அவர்களுடைய மத விவகாரங்களில்
தலையிட அரசு முயற்சிக்கவில்லை. அதேநேரம், சொத்துகளை நிர்வகிக்கும் விவகாரத்தில் தேவையான
சீர்திருத்தங்களை கொண்டுவரவும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவுமே வக்பு திருத்த மசோதா
வகை செய்கிறது.
இது முற்றிலும் சொத்துகளை கண்காணிப்பது மற்றும் நிர்வாகம் செய்வது
பற்றிய விஷயம் ஆகும். குறிப்பாக, இப்போது உள்ள சட்டத்தின் 40-வது பிரிவின்படி எந்த
ஒரு நிலத்தையும் வக்பு சொத்து என வக்பு வாரியத்தால் அறிவிக்க முடியும். இந்த கடுமையான
பிரிவு நீக்கப்படுகிறது. அதேநேரம் மசூதி நிர்வாகத்தில் எந்த மாற்றமும் செய்யப்படமாட்டாது.
முஸ்லிம்கள் நிலம் பறிக்கப்படாது இந்த புதிய மசோதா முஸ்லிம்களின் நிலத்தை பறிக்க வகை
செய்வதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் அவ்வாறு எந்த நிலமும் பறிக்கப்படாது…’’
என்று தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகள் தாக்கு: மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட
வக்பு திருத்த மசோதாவுக்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
வக்பு மசோதா மீதான விவாதத்தில் அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும் பேசினர். நள்ளிரவு
வரை நீடித்த விவாதத்தின்போது ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே காரசார
விவாதம் நடைபெற்றது.
மசோதாவின் திருத்தங்கள் குறித்து, ‘’மத்திய வக்பு கவுன்சிலில்
உள்ள 22 உறுப்பினர்களில் 2 பேர் முஸ்லிம் அல்லாதவர்களை சேர்க்க வேண்டும். மாநில வக்பு
கவுன்சிலில் உள்ள 11 உறுப்பினர்களில் 2 பேர் முஸ்லிம் அல்லாதவர்களாக இருக்க வேண்டும்.
தொடர்ந்து 5 ஆண்டுகளாக முஸ்லிம்களாக உள்ளவர்கள் மட்டுமே தங்கள் சொத்துகளை வக்பு வாரியத்துக்கு
தானமாக வழங்க முடியும். 2013-க்கு முன்பு இருந்த நிலை மீட்கப்படும். வக்பு வாரியம்
உரிமை கோரும் நிலங்கள் தொடர்பான புகார்களை வருவாய் நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றம்,
உயர் நீதிமன்றங்களும் விசாரணை நடத்த முடியும்.
வக்பு தீர்ப்பாயத்தின் முடிவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்
முறையீடு செய்ய முடியும். வக்பு வாரியத்துக்கு நிலம் தானமாக அளிக்கப்பட்டிருந்தால்
மட்டுமே அந்த நிலம் சட்டப்பூர்வமானது. வேறு இடத்தில் மசூதி கட்டப்பட்டிருந்தால், அந்த
இடம் வக்பு வாரிய சொத்தாக கருதப்படாது.
வக்பு வாரியத்தில் 2 பெண்கள் மற்றும் இதர மதங்களைச் சேர்ந்த 2
பேர் உறுப்பினராக இணைக்கப்படுவர். தாவூதி போரா உள்ளிட்ட பிரிவினருக்காக தனி வக்பு வாரியம்
அமைக்கப்படும். வக்பு சொத்துகளை முறைப்படி பதிவு செய்ய வேண்டும். வக்பு சொத்து விவரங்கள்
மாவட்ட வருவாய் துறை இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்…’’ போன்றவை திருத்தப்பட்டுள்ளன.
இந்த விஷயத்தில் சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமார் ஆகியோர்
முஸ்லிம் முதுகில் குத்தியதாலே நாடாளுமன்றத்தில் இந்த மசோதா நிறைவேறியிருக்கிறது. வக்ப்
மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்படும் பட்சத்தில் நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும்
என அகில இந்திய முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியம் அறிவிப்பு செய்திருப்பதையடுத்து, மீண்டும்
ஒரு போராட்டத்துக்கு நாடு தயாராகிறது.