Share via:
இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மகாராஷ்டிர மக்கள் தூக்கத்தை தொலைத்து தெருக்களில் தஞ்சமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலமாகவே பல்வேறு நாடுகளில் தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. அதன்படி இந்தியா, மியான்மர், நேபாளம், பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் தொடர்ந்து அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் உணரப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் ஆப்கானிஸ்தானில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அடுத்தடுத்து ஏற்பட்ட மோசமான நிலநடுக்கங்களால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை மகாராஷ்டிர மாநிலத்தின் ஹிங்கோலி பகுதியில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது. மேலும் நிலநடுக்கத்தால் அச்சமடைந்த பொது மக்கள் குடும்பம் குடும்பமாக தெருக்களில் தஞ்சமடைந்தனர். நல்ல வேளையாக இந்த நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும், சேதமும் ஏற்படவில்லை என்று தெரியவந்துள்ளது.
இந்தியாவின் வட மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் அண்மை காலமாக லேசான நிலநடுக்கங்கள் உணரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.