Share via:
தமிழகத்தில் போதை பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில் காவல்துறை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு மற்றும் போதைப் பொருள் நுண்ணறிவுஜ் பிரிவு அதிகாரிகள் மாநிலம் முழுக்க அதிரடி வேட்டை நடத்திவருகிறார்கள். அதன்படி நவம்பர் 29 தேதி முதல் டிசம்பர் 23 வரையிலும் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 148 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதோடு, 886 கஞ்சா, 1 கிலோ மெத்தகுலோன், 100 டைடோல் மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தர்மேந்திரன், இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சிவபிரகாஷ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 52 லட்சம் மதிப்புள்ள 529 கிராம் கஞ்சாவும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரும் சிக்கியிருக்கிறது. அதேபோல் சென்னை போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு வழக்கில் அப்துல் ரகுமான் எர்ஷாத், அஜித் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு 25 லட்சம் மதிப்புள்ள மெத்தகுலோன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
போதைப்பொருள் வழக்கில் குற்றவாளிகளுக்கு 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வர்ரை கடுங்காவல் தண்டனையும் அபராதமும் வழங்கப்படுகிறது. மேலும், போதைப் பொருள் வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர்களின் 7 வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.
போதைப்பொருள் நடமாட்டம் விற்பனையும் தடுத்து நிறுத்தும் வகையில் இப்போது பள்ளி, கல்லூரிகளில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் காவல் துறை இயக்குநர் மற்றும் படைத்தலைவர் ஆகியோரால் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்படுகின்றன.
போதைப் பொருள் விற்பனை, கடத்தல் தொடர்பான புகார்களை கட்டணமில்லாத உதவி எண் 10581, 9498410581 ஆகிய எண்கள் மூலமாகவும் spnibcid@gmail.com இமெயில் மூலமாகவும் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.