Share via:
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் டாக்டர் ராமதாஸ் நிச்சயம் அ.தி.மு.க.வுடன்
கூட்டணி வைப்பார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், திடீரென பா.ஜ.க. பக்கம் சாய்ந்தார்.
அதாவது, அன்புமணிக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையிலே
கூட்டணி அமைந்தது.
ஆனால், தமிழகத்தில் பா.ஜ.க., பா.ம.க. கூட்டணி எங்கேயும் வெற்றி
பெறவே இல்லை. இந்த நேரத்தில் விக்கிரவாண்டி இடைத் தேர்தல் வந்ததும், இதை தன்னுடைய பிரஸ்டீஜ்
விஷயமாக ராமதாஸ் எடுத்துக்கொண்டார்.
விக்கிரவாண்டி எங்கள் கோட்டை என்று டாக்டர் ராமதாஸ் ரொம்பவே நம்பிக்கையுடன்
இருந்தார். அதனாலே தைரியமாக களத்தில் இறங்கினார். டாக்டர் ராமதாஸ் வெற்றி பெற்றால்
பரவாயில்லை என்ற எண்ணத்தில் எடப்பாடி பழனிசாமி போட்டியில் இருந்து விலகிக்கொண்டார்.
அதனால் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படத்தைப் போட்டு வாக்கு கேட்டார்கள்.
இதுவரை எப்போதும் இல்லாத அளவுக்கு டாக்டர் ராமதாஸ் குடும்பம் விக்கிரவாண்டியில்
இறங்கி வேலை பார்த்தது. ஆனால், தேர்தல் முடிவுகள் எதிர்பாராத அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
25% வாக்குகள் வாங்குவதற்கே தடுமாறியுள்ளது.
இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் பா.ஜ.க.விடம் அன்புமணிக்கு அமைச்சர்
பதவி வாங்கிவிடலாம் என்று கணக்குப் போட்டிருந்தார் டாக்டர் ராமதாஸ். ஆனால், அவரது ஒட்டுமொத்த
கணக்கும் தப்பாகப் போயிருக்கிறது.
அதுமட்டுமல்ல, பா.ஜ.க.வுடன் கூட்டணியை மறுபரிசீலனை செய்ய வேண்டிய
அவசியமும் நேர்ந்திருக்கிறது. தோல்விக்குக் காரணம் பா.ஜ.க.வுடன் வைத்திருந்த கூட்டணி
தான் என்று பா.ம.க. நிர்வாகிகள் இப்போது சொல்லிவருகிறார்கள்.
ஆகவே, அடுத்து வெற்றி வேண்டும் என்றால் எடப்பாடி பழனிசாமியிடம்
செல்ல வேண்டிய அவசியம் வந்திருக்கிறது. அப்படி போனால் பா.ஜ.க. சும்மா இருக்குமா? அன்புமணி
மீதான வழக்கை தோண்டியெடுத்து கைது செய்துவிடுமோ என்ற பயமும் இருக்கிறது.
உள்ள மரியாதையும் போச்சுடா என்று நொந்து நூடுல்ஸ் ஆகியிருக்கிறார்
டாக்டர் ராமதாஸ். வெறுப்பு அரசியல், ஜாதி அரசியல் இனி எடுபடாது டாக்டர் என்று தி.மு.க.வினர்
கிண்டல் செய்துவருகிறார்கள்.