Share via:
எண்ணூர் மாநகராட்சி பள்ளி வளாகத்தில் டாக்டர்.அன்புமணி ராமதாஸ் பொதுமக்களை பரிசோதித்து அவர்களுக்கு மருத்துவ சேவையாற்றி வருவது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
கடந்த (டிசம்பர்) 3 மற்றும் 4ம் தேதகிளில் ஏற்பட்ட மிக்ஜாம் புயலின் போது சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் தீவிர பாதிப்புகள் ஏற்பட்டன. பெரு மழைவெள்ளம் மக்களின் வீடுகளுக்குள் புகுந்த நிலையில் அனைத்து பொருட்கள் நாசமானது.
அப்போது சி.பி.சி.எல். நிறுவனத்தில் இருந்து எண்ணெய் கசிந்து எண்ணூர் முகத்துவார பகுதி குடியிருப்புகளுக்குள் புகுந்தது. எண்ணூர் பகுதியில் படிந்துள்ள எண்ணெய் படலத்தால் பொதுமக்களின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூகவலைதளங்களில் செய்திகள் பரவியது. மேலும் பலமாக வீசும் டீசல் காற்றால் அங்கு வசிக்கும் மக்களுக்கு அடிக்கடி மூச்சுத்திணறல் ஏற்படுவதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் பா.ம.க. தலைவரும், டாக்டருமான அன்புமணி ராமதாஸ், எண்ணூர் பகுதியில் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தார். எண்ணூர் மாநகராட்சி பள்ளி வளாகத்தில் பசுமைத்தாயகம் அமைப்பு சார்பில் இந்த மருத்துவ முகாம் இன்று (டிச.26) நடத்தப்பட்டது.
இதில் அன்புமணி ராமதாஸ், எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மக்களிடம் அவர்களின் குறைகளை கேட்டறிந்து மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதோடு ஆலோசனைகளையும் வழங்கினார். இது அங்கிருந்த மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.