Share via:
சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் அன்னை கேப்பிடல் சொலிசன்ஸ், அன்னை
இன்போசாப்ட் சொலிசன்ஸ், அன்னை அகாடமி பிரைவேட் லிமிடெட், தமிழ் அன்னை ஹாலிடஸ் லிமிடேட்
ஆகிய பெயர்களில் ஆன்லைன் டிரேடிங் நிறுவனம்
நடத்திவந்த தினேஷ்குமாரும் அவரது கூட்டாளிகளும் சேர்ந்து தன்னிடம் 88 லட்சம் ரூபாய்
ஏமாற்றிவிட்டதாக மணலியைச் சேர்ந்த பாலாஜி என்பவர் சென்னை பெருநகர காவல் ஆணையாளிரிடம்
ஒரு புகார் கொடுத்திருந்தார்.
அந்த புகாரில், ’வாடிக்கையாளர்களிடம் 1 லட்சம் ரூபாய் முதலீடு
செய்தால் ஒவ்வொரு மாதமும் 17,100 ரூபாய் வீதம் 12 மாதங்களில் அந்த பணம் திருப்பிக்
கொடுக்கப்படும் என்று ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றியிருப்பது தெரியவந்தது.
இது குறித்து சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர்
உத்தரவின் பேரில் மத்தியக் குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையாளர் பி.கே.செந்தில்குமாரியின்
மேற்பார்வையில் மத்திய குற்றப்பிரிவு காவல் துணை ஆணையாளர் என்.எஸ்.நிஷா, எஸ்.முத்துவேல்
பாண்டி, காவல் உதவி ஆணையாளர் எஸ். ஜான் விக்டர் ஆகியோர் விசாரணையில் ஈடுபட்டனர்.
அதன்படி தலைமறைவாக இருந்த தினேஷ்குமார், பிரேம் கிருபால், திலீப்குமார்,
அருண்குமார் ஆகிய நான்கு பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில்
அடைக்கப்பட்டனர். இவர்கள் சுமார் 300 பேரிடம் 15 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்திருப்பது
கண்டறியப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இதுபோன்ற கவர்ச்சிகரமான
விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.