ராமதாஸ்க்கு வேற வேலையில்லை என்று ஸ்டாலின் கூறியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டுமென 24 மணி நேரக் கெடு விதித்து பா.ம.க.வினரும் கூட்டணிக் கட்சிகளும் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்தனர். இதற்கு ஸ்டாலின் எந்தப் பதிலும் தெரிவிக்கவில்லை. அதேநேரம் அமைச்சர் சேகர் பாபு, ‘மன்னிப்பு கேட்பதற்கு வாய்ப்பே இல்லை’ என்று ஒரே போடாக போட்டுவிட்டார்.

இதையடுத்து வட தமிழகத்தில் பெரும் அதகளம் நடக்கப்போகிறது என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதுவும் நடக்கவில்லை. அந்த விவகாரத்தை திசை திருப்புவதற்காக டாக்டர் ராமதாஸ் அடுத்த அறிக்கையை வெளியிட்டுவிட்டார். அதாவ்து, ’’ஓர் ஆண்டில் மட்டும் ஆன்லைன் ரம்மிக்கு 16 பேர் உயிர் இழந்திருக்கிறார்கள். தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள சிலோன் காலனியைச் சேர்ந்த அருண்குமார் என்ற இளைஞர் ஆன்லைன் சூதாட்டத்தில் பல்லாயிரம் ரூபாய் பணத்தை இழந்ததால் ஏற்பட்ட மன உளைச்சலைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

சில நாட்களுக்கு முன் ஒரே நாளில் ரூ.20 ஆயிரத்தை இழந்ததால் ஏற்பட்ட விரக்தி மற்றும் கடன் சுமையால் அருண்குமார் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையானவர்கள் அதிலிருந்து மீண்டு வர முடியாது என்பதற்கு இது தான் கொடிய எடுத்துக் காட்டு ஆகும். பா... நடத்திய தொடர் போராட்டங்களின் காரணமாக ஆன்லைன் சூதாட்டம் இரு முறை தடை செய்யப்பட்டது. ஆனாலும், அந்தத் தடையை நீதிமன்றத்தில் நியாயப்படுத்த தமிழக அரசு தவறி விட்டதன் காரணமாகவே ஆன்லைன் சூதாட்டம் லட்சக்கணக்கான குடும்பங்களை மீள முடியாத கடன் வலையில் சிக்க வைத்திருக்கிறது.

தமிழக அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் ரம்மி, போக்கர் போன்ற விளையாட்டுகளுக்கு பொருந்தாது என்று கடந்த நவம்பர் 10-ஆம் நாள் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததற்குப் பிறகு கடந்த ஓராண்டில் மொத்தம் 16 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளுக்கு முடிவு கட்டுவதற்கான ஒரே வழி சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றத்தில் தடை பெறுவது தான். ஆனால், தீர்ப்பளிக்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசால் தடை பெற முடியவில்லை’’ என்று குற்றம் சாட்டியிருக்கிறார்.

இதற்கு தி.மு.க.வினர் கடுமையாக பதிலடி கொடுத்துவருகிறார்கள். ‘’அய்யா ராமதாஸ் அவர்களே நீங்கள் கூட்டணியில் இருக்கும் ஒன்றிய அரசுதான் ரம்மிக்கு முழு ஆதரவு அளித்து உள்ளது. தமிழ்நாடு கொண்டுவந்த தடை சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. நீங்கள் ஆதரவு அளிக்கும் தமிழ்நாடு ஆளுநர் ரம்மி ரவிதான் இதற்கு ஆதரவு அளித்து அந்த உரிமையாளர்களை ஆளுநர் மாளிகையில் சந்தித்து பெரிய ஆலோசனையை மேற்கொண்டார் தமிழ்நாடு மக்கள் இதை மறந்துவிடவில்லை. தாங்கள் தமிழர்கள் மீது கொண்ட அளபரிய உணர்வை நிருபிக்க உங்கள் கூட்டணி கட்சியான ஒன்றிய அரசை உடனடியாக நிர்பந்தம் செய்து தமிழ்நாடு மட்டும் இல்லாதல் இந்தியா முழுவதும் ரம்மியை தடை செய்யுங்கள்.

பாஜக கைப்பாவை தமிழக ஆளுனர் ஆன்லைன் சூதாட்ட அதனை சட்டத்தில் கையெழுத்திடாமல் இருப்பதால் அய்யா இப்பொழுது பாஜக கூட்டனியில் இருந்து விலகும் முடிவை எடுப்பார்’’ என்றெல்லாம் போட்டு வெளுக்கிறார்கள்.

இதற்கு பா.ம.க.வில் இருந்து எந்த சத்தத்தையும் காணவில்லை.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link