Share via:
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற சித்தாந்தத்தை ஆளும் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் ஒருபோதும் ஏற்றுக்கொண்டது இல்லை. போதிய எம்.எல்.ஏ.க்கள் கிடைக்காத நிலையிலும் மைனாரிட்டி அரசு நடத்திய கருணாநிதி காங்கிரஸ் கட்சியினருக்கு அமைச்சர் பதவியைக் கொடுக்கவில்லை. எனவே, ஆளும் கட்சியில் எம்.எல்.ஏ., எம்.பி. பதவி வாங்குவதே போதும் என்பதே தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் நிலைப்பாடாக இருந்துவந்தது.
இந்த நிலையில்தான் விடுதலைச் சிறுத்தைகள் முதன்முதலாக ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்று கோஷம் எழுப்பினார்கள். ஆனால், தி.மு.க.வினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ‘இதைக் கேட்பதற்கு இன்னமும் உரிய நேரம் வரவில்லை, இப்போது எங்களுக்கு கூட்டணியே முக்கியம்’ என்று பல்டி அடித்துவிட்டார் திருமாவளவன.
இப்போது அரசியலுக்குள் நுழைந்திருக்கும் விஜய் யாரும் எதிர்பாராத நிலையில், ‘எங்கள் கொள்கையை ஏற்றுக்கொண்டு உடன் வருபவர்களுக்கு அதிகாரத்தில் பங்கு வழங்கப்படும்’ என்று அறிவித்திருக்கிறார். இது திருமாவளவனுக்கு வீசப்பட்ட வலை என்றே கருதப்பட்டது. ஆகவே, வேறு வழியின்றி கடுமையாக ரியாக்ட் செய்தார்.
இந்த நிலையில் திருமாவளவன் பங்கேற்கும் புத்தக வெளியீட்டு விழாவில் விஜய்யும் பங்கேற்க இருப்பதாகவும் அரசியல் கணக்குகள் மாறும் என்றும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தி.மு.க.வினருக்கு வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது. கூட்டணி பலம் காரணமாகவே ஆட்சியில் இருக்கும் ஸ்டாலின், இப்போது கூட்டணிக் கட்சிகளைத் தக்க வைப்பதற்கு எந்த எல்லைக்கும் போவார் என்றே சொல்லப்படுகிறது.
பணப் பெட்டிகளுக்கு கம்யூனிஸ்ட் கட்சியினரையும் கூடுதலாக ரெண்டு சீட் கொடுத்து விடுதலை சிறுத்தைகளையும் அடக்கிவிட முடியும் என்று கணக்குப் போடுகிறார். அதேநேரம், மீண்டும் ஒரு மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கி கட்சியைக் காலி செய்யவும் வாய்ப்பு இருக்கிறது என்பதால் திக் திக் திகிலில் இருக்கிறார் ஸ்டாலின்