Share via:
அமைச்சர் உதயநிதி தன் பாணியில் எப்போதும் போல கலகலப்பாக பேசி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள சம்பவம் அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
சென்னை தேனாம்பேட்டையில் தி.மு.க. இளைஞர் அணியின் 45ம் ஆண்டு தொடக்க விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய மாநில இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி உரை நிகழ்த்தினார்.
அவர் பேசும்போது, 2024 நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்டு 40க்கு 40 வெற்றியை பரிசாகக் கொடுத்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் தி.மு.க. தலைமையிலான மு.க.ஸ்டாலின் அரசுக்கு பெண்கள் மத்தியில் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதை தேர்தல் முடிவுகள் உணர்த்துவாக தெரிவித்தார். மேலும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மற்றும் விடியல் பயணத் திட்டம் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவதாக குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், தி.மு.க.வில் பல அணிகள் செயல்பட்டு வந்தாலும் அவற்றுக்கு முத்தாய்ப்பாக இருப்பது இளைஞர் அணிதான். மேலும் தான் துணை முதலமைச்சராக பொறுப்பேற்கப் போவதாக வரும் செய்திகள் எதுவும் உண்மை கிடையாது. வெறும் வதந்திதான்.
தமிழகத்தில் பொறுப்பில் இருக்கும் அனைத்து அமைச்சர்கள் மற்றும் தி.மு.க. அமைப்பாளர்கள் அனைவரும் முதலமைச்சருக்கு துணையாக இருப்போம். எவ்வளவு பெரிய பொறுப்பு வந்தாலும், தனது மனதிற்கு மிக மிக நெருக்கமான ஒரு பொறுப்பு என்றால் அது இளைஞர் அணி செயலாளர் பொறுப்புதான் என்று பெருமையுடன் பேசினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
உதயநிதி அவர் தன்னோட நிலைப்பாட்டை சொன்னாலும் இதை நம்புவதா வேண்டாமா என்று மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று அரசியல் நோக்கர்கள் கிண்டலாக பதிவு செய்து வருகின்றனர்.