Share via:

மாற்றுத்திறனாளிகளுக்கு தி.மு.க. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற
வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராடும் மாற்றுத் திறனாளிகளை வீட்டில் கைது, காணும் இடத்தில்
கைது, முற்றுகைப் போராட்டத்தில் கைது என்று ஸ்டாலின் அரசு விரட்டி விரட்டி வேட்டையாடுகிறது.
மாற்றுத்திறனாளிகளை இத்தனை கொடூரமாக கைது செய்ய வேண்டுமா என்று காண்பவர்கள் நெஞ்சம்
பதைபதைக்கிறது.
உதவித் தொகை உயர்வு, 100 நாள் வேலைத் திட்டத்தில் வாய்ப்பு உள்ளிட்ட
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தலைமைச் செயலகத்தை முற்றுகையிடப் போவதாக மாற்றுத்திறனாளிகள்
அறிவிப்பு வெளியிட்டிருந்தனர். எனவே, நேற்று காலை முதலே போராட்டக் குழுவில் இருப்பவர்களை
வீடு தேடிச்சென்று கைது நடவடிக்கை எடுத்தது போலீஸ். ஆனாலும், நியாயமான கோரிக்கைகள்
குறித்து போராட்டம் நடத்துவதற்கு பஸ், ரெயிலில் இன்று சென்னைக்கு வந்துகொண்டே இருக்கிறார்கள்
மாற்றுத் திறனாளிகள்.
சென்னை கோட்டையை முற்றுகையிட வருகை தரும் மாற்றுத்திறனாளிகளை கோயம்பேடு
பஸ் ஸ்டாண்ட், ரயில் நிறுத்தம் என்று காணும் இடங்களில் எல்லாம் தடுத்து நிறுத்தி போலீஸார்
கைது செய்கிறார்கள். போராட்டம் நடத்தத் துடிப்பவர்களை வலுக்கட்டாயமாகக் கைது செய்கிறார்கள்.
அந்த வகையில் 500க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டுள்ளதாகத்
தெரிகிறது.
இது குறித்துப் பேசும் மாற்றுத் திறனாளிகள், ‘’எங்களை மக்கள் விரோத
சக்திகள் போல காணும் இடமெல்லாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்கிற பெயரில் கைது செய்வதை
உடனடியாக கைவிட்டு பேச்சுவார்த்தைகு அழைக்க வேண்டும். வறுமையில் வாடும் மாற்றுத்திறனாளிகளின்
அடிப்படையான நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு உடனடியாக
முன் வர வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்கிற பெயரில் மாற்றுத் திறனாளிகளை முடக்கி,
கைது செய்வதை காவல்துறை உடனடியாக கைவிட வேண்டும்’’ என்கிறார்கள்.
ஜனநாயக முறைப்படி போராடும் மாற்றுத்திறனாளிகளை மனிதாபிமானத்துடன்
நடத்தவேண்டாமா ஸ்டாலின்..? வாக்குறுதியைக் காப்பது தான் அட்சியாளருக்கு அழகு.