திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தாலே நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்துவிடும் என்றும் காவல் துறை அத்துமீறி நடக்கும், அதிகாரிகளிடம் லஞ்ச லாவண்யம் தாண்டவமாடும் என்றும் சொல்லப்படுவது உண்டு. அது உண்மை என்பது போன்று பாலியல் வன்கொடுமை வழக்கில் தி.மு.க. அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

இது குறித்து பாமக தலைவர் அன்புமணி, ‘’சென்னை அண்ணாநகரில் 10 வயது சிறுமி தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் சென்னை மாநகர காவல்துறையின் செயல்பாடுகளை கடுமையாக கண்டித்திருக்கும் உச்சநீதிமன்றம், அந்த வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழுவை அமைக்கப் போவதாக அறிவித்திருக்கிறது. அதற்காக தமிழ்நாடு மாநில கேடருக்கு ஒதுக்கப்பட்ட பிற மாநிலங்களைச் சேர்ந்த 7 இ.கா.ப. அதிகாரிகளின் பெயர்களை வழங்கும்படி ஆணையிட்டுள்ளது.

தமிழக காவல்துறை எந்த அளவுக்கு சீரழிந்திருக்கிறது என்பதற்கு உச்சநீதிமன்றத்தின் கண்டனம் தான் சான்று ஆகும். அண்ணாநகரைச் சேர்ந்த 10 வயது சிறுமி அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரால் கடந்த ஆகஸ்ட் மாதம் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தொடர்பாக புகார் அளிக்கச் சென்ற சிறுமியின் பெற்றோரை காவல்துறையினர் கடுமையாகத் தாக்கியதுடன், சிறுமியின் தாய் நடத்தை மீதே சந்தேகம் தெரிவித்ததுடன், அவர் மீது வழக்குப் பதிவு செய்யப் போவதாகவும் மிரட்டியுள்ளனர். அதுமட்டுமின்றி, அந்த சிறுமி அளித்த வாக்குமூலத்தின் ஒரு பகுதியை கசிய விட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி பெற்றுத் தர வேண்டிய காவல்துறையினர் பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் குடும்பத்தினரை அச்சுறுத்தியிருப்பதை ஏற்றுகொள்ள முடியாது.

காவல்துறையினரின் நடவடிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது மட்டுமின்றி, வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி கடந்த மாதம் ஆணையிட்டது. அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின் போது தான் தமிழக காவல்துறைக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழக காவல்துறையின் செயல்பாடுகள் ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் அவமானம் ஆகும்.

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உயர்நீதிமன்றம் மாற்றிய நிலையில், அதை தமிழக அரசு ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும். மாறாக, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பதன் மூலம் காவல்துறையின் தவறுகளுக்கு துணை போகிறது என்று தான் பொருளாகும். ஒரு காலத்தில் ஸ்காட்லாந்துயார்டு காவல்துறைக்கு இணையாக போற்றப்பட்ட தமிழக காவல்துறையின் செயல்பாடுகள் நாளுக்கு நாள் சீரழிந்து வருவது கவலையளிக்கிறது’’ என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பா.ம.க.வினர், ‘’ஆட்சி செய்ய முடியலைன்னா வீட்டுக்குப் போங்க’ என்று ஹேஸ்டேக் போட்டு வைரலாக்கி வருகிறார்கள். தி.மு.க. இந்த விவகாரத்தில் வாயை மூடிக்கொண்டிருக்கிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link