Share via:
தனிக் கட்சி தொடங்கி அதை கரையேற்ற முடியாமல் தி.மு.க. ஆதரவாளராக
மாறியிருப்பவர் நடிகர் கமல்ஹாசன். அவருக்கு இந்த ஆண்டு ராஜ்யசபா எம்.பி. பதவி வழங்கப்படுவது
உறுதியாகியிருக்கிறது. இந்த நிலையில் சினிமா ரசிகர்கள் குறித்து அவர் பேசிய பேச்சுக்கு
விஜய் ரசிகர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் 8ம் ஆண்டு துவக்க விழாவில் பேசிய
கமல்ஹாசன், ‘’நான் தன்னம்பிக்கையுடன் உயிர்த்து இருக்க தமிழ்நாடு மக்கள் தான் காரணம்.
தமிழே என்று நான் சொல்வது என் மொழி மட்டும் அல்ல உங்கள் மொழிதான், நம்மை இணைப்பது தமிழ்
மொழிதான். இன்று உலக தாய் மொழிகள் தினம். நம் மொழியின் குரல் வலையை பிடிக்க நினைப்பவர்கள்
இதை உணர வேண்டும். தமிழை யாராலும், எவராலும் இறக்க முடியாது.
தோற்றுப்போன அரசியல்வாதி போல பேச வேண்டாம் என கூறுவார்கள். நான்
20 வருடத்திற்கு முன் அரசியலுக்கு வந்திருக்க வேண்டும். அப்படி வராதது தான் என் தோல்வி
என நான் நினைக்கிறேன். அப்படி நான் வந்து இருந்தால் நான் நின்று பேசி இருக்க வேண்டிய
இடம் வேறு மாதிரி இருக்கும். கடைசி ஒரு வாக்காளர் இருக்கும் வரை நம் பணி தொடரும்.
வாக்காளர்கள் வேறு; என் அனுபவத்தில் நான் இதை தெரிந்து கொண்டேன்.
இது ஒரு இக்கட்டான காலம். ஆனால், இதை தமிழர்கள் ஏற்கனவே பார்த்து உள்ளனர். மொழிக்காக
உயிரை விடுவீர்களா என கேட்டால் ஏற்கனவே விட்டு உள்ளனர். எந்த மொழி தேவை? எந்த மொழி
தேவை இல்லை என குழந்தைகளுக்கு கூட தெரியும். இந்த வருடம் நமது குரல் பாராளுமன்றத்தில்
ஒலிக்க போகிறது. அடுத்த வருடம் உங்கள் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்கப் போகிறது. அதற்கு
கட்டியங்கூறும் விழாதான் இது’’ என்று கூறினார்.
இந்த பேச்சு நடிகர் விஜய் குறித்து பேசியதாகவே எடுத்துக்கொண்டு
கமல்ஹாசனை கடுமையாகத் தாக்குகிறார்கள் விஜய் ரசிகர்கள். மேலும், ’’ரசிகர்கள் வேறு வாக்காளர்கள்
வேறு” என்பதே ஒரு அரைப் புரிதலான கருத்து. ரசிகர்களுக்குள்ளிருந்தும் தான் வாக்காளர்கள்
உருவாகுவார்கள். அது எவ்வளவு சதவீதம் மாற்றப்படுகிறது என்பதில் தான் ஒரு கட்சியின்
வெற்றி அடங்கியிருக்கிறது. ஊழல் கூட்டத்துக்கு எதிராகப் பேசியவர் இன்று அதே ஊழல் கூட்டத்துடன்
கை கோர்த்து நிற்கிறார். அரசியலுக்கு வந்துவிட்டு பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் போனால்
இப்படித்தான் நடக்கும். எங்கள் தலைவர் சினிமாவை தூக்கிப் போட்டுவிட்டு வருகிறார். அதனால்
எம்.ஜி.ஆர். போன்று மாபெரும் வெற்றி பெறுவார்’’ என்று பதிலடி கொடுப்பதுடன் சினிமாவின்
மூத்த கலைஞர் என்றும் பாராமல் விதவிதமாக அவமானப்படுத்துகிறார்கள்.
இதற்கு கமல் கட்சியினர், ‘’எங்கள் தலைவர் வழிகாட்டிப் பேசிய ஒரு
கருத்தை அவர்களுக்கு எதிராக பேசியதாக தாங்களாகவே நினைத்துக் கொண்டு கதறுகிறார்கள்.
இதில் எம்.ஜி.ஆர் போன்று வெற்றி பெறுவோம் என்று வேறு கூவிக்கொண்டிருக்கிறார்கள். பாவம்.
இவர்களை வைத்துக்கொண்டு, 3 இல்ல 300 வியூக அமைப்பாளர்கள் வைத்தால் கூட வேலைக்காகாது.
“ரசிகர்கள் வேறு, வாக்காளர்கள் வேறு” – இது உங்கள் தலைவருக்கே தெரியும்.
அவரை கேட்டு தான் பாருங்களேன்…’’ என்று விவாதத்துக்கு அழைக்கிறார்கள்.
அஜித் ரசிகர்கள், ரஜினி ரசிகர்கள், சீமான் ரசிகர்களுடன் மோதலை
முடித்துவிட்டு இப்போது கமல் பக்கம் பாய்ந்திருக்கிறார்கள்.