Share via:
அண்ணாமலைக்கு மீண்டும் தலைவர் பதவி மட்டும் தரவில்லை என்றால் பா.ஜ.க.விலே
இருக்கமாட்டோம் என்று அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து பதிவுகளை போட்டு அவருக்கு ஆதரவு
தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் சமீபத்தில் பா.ஜ.க.வில் புதிய மாவட்டச் செயலாளர்கள்
நியமனம் செய்யப்பட்டார்கள்.
இதுகுறித்து அண்ணாமலை, ‘’மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திரமோடி
மற்றும் தேசியத் தலைவர் நட்டா ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, புதிய மாவட்டத் தலைவர்களாகப்
பொறுப்பேற்றிருக்கும் அனைவருக்கும், மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தேசப் பணிகளிலும், மக்கள் பணிகளிலும் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, தமிழகத்தில்,
நமது பாரதப் பிரதமர் மோடி அவர்களின் வழிகாட்டுதலின்படி நல்லாட்சியைக் கொண்டு வரவும்,
வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி, நமது தமிழகத்தைக் கொண்டு செல்லவும், அயராது
உழைக்க வேண்டும்’ என்று எல்லோருக்கும் வாழ்த்து கூறியிருந்தார்.
இதே போன்று மற்ற பா.ஜ.க. தலைவர்களும் புதிய மாவட்டத் தலைவர்களுக்கு
வாழ்த்து அனுப்பியிருக்கிறார்கள். இப்படி புதிய மாவட்டத் தலைவர்களுக்கு வாழ்த்து கூறியிருக்கும்
தமிழக பா.ஜ.க.வின் முக்கியத் தலைவர்களான தமிழிசை செளந்தர்ராஜன், வானதி சீனிவாசன், ராமசீனிவாசன்,
நயினார் நாகேந்திரன் ஆகியோர் யாருமே புதிய நிர்வாகிகள் நியமனத்திற்கு அண்ணாமலைக்கு
நன்றி தெரிவிக்கவில்லை. ஒரு இடத்தில்கூட இவர்கள் அண்ணாமலை பேரைக் குறிப்பிடவில்லை.
இதை சுட்டிக் காட்டி கொதித்திருக்கும் அண்ணாமலை ஆதரவாளர்கள்,
‘’கட்டு சோத்துல பெருச்சாளிகளை வைத்திருக்கிறார் நமது தமிழக பாஜக தலைவர். தமிழிசை,
வானதி, நயினார் ஆகியோர் ஒருவர் கூட நம் தலைவர் அண்ணாமலை பேரை எந்த இடத்திலும் குறிப்பிடல…
எதிரிகளை விட துரோகிகளே ஆபத்தானவர்கள்… அண்ணாமலைக்கு தலைவர் பதவி இல்லை என்றால் தமிழகத்தில்
பாஜக வாக்கு வங்கி… 0.1% ஆக சரிந்துவிடும்..’’ என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்கள்.
தற்போது நியமனம் செய்யப்பட்டுள்ள அத்தனை தலைவர்களும் கேசவ விநாயகம்
ஆதரவாளர்கள் என்றும் குறிப்பாக மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், எல்.முருகன்
ஆகியோர் ஆதரவாளர்கள் என்றே சொல்லப்படுகிறது. அதனாலே அண்ணாமலை ஆதரவாளர்கள் கொதிநிலையில்
இருக்கிறார்கள்.
விரைவில் அண்ணாமலை மாற்றப்படுவார் என்பதே இன்றைய நிலவரம் என்கிறார்கள்.