Share via:
காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதிகள் உடன் பாஜக
மாநில தலைவர் அண்ணாமலை சந்திப்பு குறித்து வெளியாகி இருக்கும் படம் சனாதனத்தின் வெளிப்பாடு
என்று அவரது ஆதரவாளர்களே கொந்தளிக்கிறார்கள். அண்ணாமலையை தரையில் அமர வைத்து ஆசிர்வாதம்
தரலாமா… தன்மானமுள்ள அண்ணாமலை இதற்கு எப்படி அனுமதிக்கலாம் என்றெல்லாம் கேள்வி எழுப்புகிறார்கள்.
இந்த நிலையில் மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூவும் அண்ணாமலையை அரைவேக்காடு என்று கிண்டல்
அடித்திருக்கிறார்.
தி.மு.க.வுக்கு எதிராக தினம் ஒரு குற்றச்சாட்டு கூறிவந்தார் தமிழக
பா.ஜ.க தலைவர் அண்ணாமலை. ஆனால், கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழாவுக்கு அடுத்து ஒட்டுமொத்த
நிலவரமும் மாறிவிட்டது. நாணயம் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வது அரசு விழா… கருணாநிதி
சமாதிக்குப் போய் கும்பிடு போட்டது ஏன் என்று அண்ணாமலையை அ.தி.மு.க.வினர் கடுமையாக
டிரோல் செய்து வந்தார்கள்.
இதற்கு பதில் அளித்த அண்ணாமலை, ‘’ஐந்து முறை முதல்வராக இருந்தவரும்,
முன்பு பா.ஜ.க. கூட்டணியில் இருந்தவருமான கருணாநிதி சமாதிக்குப் போய் கும்பிடு போட்டுவந்ததில்
எந்த தப்பும் இல்லை. அ.தி.மு.க.வினர் போன்று உரண்டு பிரண்டு கும்பிடு போட்டு பதவிக்கு
வரவில்லை. கூட்டணிக்கு வரவேண்டும் என்று விரும்புபவர்களே இப்படி மீண்டும் மீண்டும்
பேசிக்கொண்டு இருப்பார்கள்’’ என்று எடப்பாடி பழனிசாமியைத் தாக்கியிருந்தார்.
இந்த நிலையில் அண்ணாமலை அரைவேக்காட்டுத்தனமாக அரசியல் செய்கிறார்
என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய செல்லூ ராஜூ, ‘’பா.ஜ.க. மாநில தலைவர்
அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி என்பதை அவர் மீண்டும் நிரூபித்துள்ளார். அண்ணாமலை அரைவேக்காட்டுத்தனமாக
அரசியல் செய்கிறார். தமிழ்நாட்டில் பா.ஜ.க. கூட்டணி குறித்து அண்ணாமலை முடிவு எடுக்க
முடியாது அகில இந்திய தலைமைதான் முடிவு எடுக்க முடியும்’’ என்று கூறியிருக்கிறார்.
இவங்க பஞ்சாயத்து முடியவே முடியாது போலிருக்கிறதே.