Share via:
சாதாரண நபர்கள் வழக்கை நீதிமன்றம் எடுத்துக்கொள்வதற்கு மாதக்கணக்கில்
இழுத்துக்கொண்டே இருக்கும். ஆனால், சவுக்கு சங்கர் விவகாரத்தில் எல்லாமே அவசரம் அவசரமாக
நடக்கிறது.
இது குறித்து, அதிகாரத்தில் உள்ளவர்கள் தொடர்பு கொண்டு பேசியதால்,
அவசரமாக வழக்கை விசாரித்தேன் என்று நீதியரசர்.சுவாமிநாதன் வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்.
சவுக்கு சங்கருக்காக அழுத்தம் கொடுத்தது பா.ஜ.க. டெல்லி மேலிடமா அல்லது அ.தி.மு.க.
முக்கியப் புள்ளியா என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்திருக்கிறது.
சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டதற்கு எதிராக அவரது
தாயார் கமலா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை நீதிபதிகள்
ஜி.ஆர். சுவாமிநாதன், பாலாஜி ஆகியோர் விசாரித்து வந்தனர். இந்நிலையில், இன்று நடைபெற்ற
இந்த வழக்கு விசாரணையில், இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர்.
சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்ட உத்தரவில் கஞ்சா வழக்கை குறிப்பிடப்படாததை
சுட்டிக்காட்டிய நீதிபதி, கவனம் செலுத்தாமல் இந்த குண்டர் சட்டம் போடப்பட்டிருப்பதாக
தெரிவித்தார். மேலும், அவர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டார்.
அதேநேரம் மற்றொரு நீதிபதியான பாலாஜி இதற்கு முரணான தீர்ப்பை வங்கினார். எனவே, இந்த
வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தனது உத்தரவை வாசிக்கும்
போது அதில் குறிப்பிட்ட வார்த்தையை அழுத்தமாக கூறினார். “இந்த வழக்கு தொடர்பாக
சில அதிகாரமிக்க நபர்கள் தொடர்ந்து பேசி வந்ததாலேயே இதனை அவசர வழக்காக நாங்கள் எடுத்தோம்”
என தெரிவித்திருந்தார்.
நீதிபதி கூறியதை பார்க்கும் போது, அதிகாரத்தில் இருப்பவர்கள் இந்த
வழக்கு தொடர்பாக நீதிபதிகளிடம் பேசி வருகிறார்களோ என்ற சந்தேகத்தை எழுப்புவதாக சட்ட
நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே சவுக்கு சங்கர் மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாகவே
தமிழக அரசு அவர் மீது இத்தகைய நடவடிக்கைகளை எடுக்கிறது என அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்
கூறி வரும் நிலையில், நீதிபதி கூறிய வார்த்தை, கவனிக்கத்தக்க விஷயமாக உள்ளது.
நீதிபதிகளுக்கு அழுத்தம் கொடுத்தது யார் என்பதை வெளிப்படையாகத்
தெரிவிக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அழுத்தம் கொடுப்பதற்காக
தீர்ப்பு கொடுக்கப்படுகிறது என்றால் அது நியாயமான தீர்ப்பாக இருக்குமா..? நீதிக்கு
இது ஒரு போராட்டம்.