Share via:
தி.மு.க.வின் தலைவர்
கருணாநிதியை ஹைடெக் டெக்னாலஜியுடன் மேடைக்குக் கொண்டுவந்து, ‘என் உயிரினும் மேலான உடன்பிறப்புகளே…’
என்று பேச வைத்ததும் ஒட்டுமொத்த அரங்கமும் அதிரும் அளவுக்கு கைதட்டல் கிடைத்திருக்கிறது.
அதேபோல் தமிழகம் முழுக்க தி.மு.க,வினருக்கு இந்த விழா பெரும் உற்சாகம் அளித்திருக்கிறது.
சிறப்பு விருந்தினராக
கலந்துகொண்டு பேசிய ஏஐ தொழில்நுட்ப கருணாநிதி, “என் உயிரினிலும் மேலான அன்பு உடன்பிறப்புகளே,
தந்தை பெரியார் வடித்த கொள்கையை, பேரறிஞர் அண்ணா வகுத்த பாதையை, என்னால் கட்டி காக்கப்பட்ட
திடமான முழக்கத்தை ஓங்கி ஒலிக்க செய்து, கம்பீரமாக கழகத்தை ஆட்சி பொறுப்பில் அமர செய்திருக்கும்
தம்பி மு.க.ஸ்டாலினை எண்ணி எண்ணி எனது நெஞ்சம் பெருமிதம் கொள்கிறது.
ஸ்டாலின் என்றாலே
உழைப்பு, உழைப்பு, உழைப்பு தான். கழகப் பணியில் 55 ஆண்டுகளாக அயராது உழைப்பவர், திராவிட
செம்மலாய், இந்தியாவின் முன்மாதிரி முதல்வராய், நல் உலகம் போற்றும் நாயகனாய் விளங்குகிறார். சமத்துவம்,
சகோதரத்துவம், சமூகநீதி இவற்றின் பாதையில் கழக ஆட்சியை அவர் மிகச்சிறப்பாக வழிநடுத்துகிறார்.
இன மானம், மொழி மானம், சுயமரியாதை, கண்போல் காக்கும் அவரது கடமை உணர்வைக் கண்டு, நான்
வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன்” என்று பேச வைத்திருக்கிறார்கள்.
மாறிவரும் தொழில்நுட்பங்களை
உடனுக்குடன் ஏற்றுக்கொண்டு அதை நடைமுறைப்படுத்துவதில் தி.மு.க. எப்போதுமே முன்னணியில்
இருக்கிறது. அதனாலே வெற்றிக்கு வாய்ப்பு இருந்தாலும் கடந்த தேர்தலில் பிரசாந்த் கிஷோரைக்
கொண்டுவந்தே தேர்தலை நடத்தினார்கள். அதேபோல் அமைப்புகளை உருவாக்கி வைத்திருக்கி இப்போதும்
கட்சிக்குள் புதிய ரத்தம் பாய்ச்சி வருகிறார்கள். இப்போது உதயநிதியை முன்னிலைப்படுத்தி
2026 தேர்தலை சந்திப்பதற்கு இந்த மாநாட்டில் முதல் புள்ளி போட்டுவிட்டார்கள். ஆனால், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. இதில்
மிகவும் பின் தங்கியுள்ளது.
அதனாலே இந்த மாநாடு
முடிந்ததுமே அடுத்த ஆட்சியும் தி.மு.க.தான் என்று ஸ்டாலின் உறுதிபட அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர், ‘’வள்ளுவ முனை முதல் தலைநகர் சென்னை வரை இனமான உணர்வால் ஓருயிராய் வாழும் உடன்பிறப்புகளின்
சங்கமமானது அண்ணா சாலை ஒய்.எம்.சி.ஏ. திடல்! அமெரிக்கப் பயணத்துக்குப் பின் உடன்பிறப்புகளின்
முகங்களை ஒருசேரக் கண்டு உற்சாகம் பெற்றேன்! நமது உயிர்நாடிக் கொள்கைகளில் ஒன்றான மாநில
சுயாட்சிக் கொள்கையை வென்றெடுக்கவும் – வரலாறு காணாத வெற்றியை 2026 தேர்தலில் பெற்றிடவும்
இந்த முப்பெரும் விழாவின் உணர்வெழுச்சியை உரமாக்கி வெற்றிச் சரிதம் படைப்போம்! தத்தமது
ஊர்களுக்குத் திரும்பிடும் உடன்பிறப்புகள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொண்டு வீடு சேர
வேண்டும்’’ என்று கருணாநிதி ஸ்டைலில் கடிதம் எழுதியிருக்கிறார்.
2026 தேர்தலுக்கு
தி.மு.க. தயாராகிவிட்டது.