Share via:
தமிழகம் வரும் உள்துறை அமைச்சரும், பாஜகவின் முக்கிய மேலிடத் தலைவருமான
அமித்ஷா, இன்று பாரதிய
ஜனதா கட்சியின் பூத் கமிட்டி முதல் மண்டல மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று நெல்லை வருகிறார்.
இந்த சமயத்தில் திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட கே.எஸ்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட சிலர்
இணைய இருப்பதாகக் கூறப்படுகிறது.
மக்கள் விரோத ஆட்சி நடத்தும் திமுகவை அரியணையில் இருந்து வீழ்த்துவோம்
என்று அதிமுக – பாஜக கூட்டணி கட்சியினர் ஆவேசமாக பேசி வரும் பரபரப்பான அரசியல் சூழலில்
உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று நெல்லை வருவது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
கேரள மாநிலம் கொச்சியில் நடக்கும் கட்சி நிகழ்ச்சியில் கலந்து
கொண்ட பிறகு இன்று மதியம் 2.50 மணியளவில் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு அவர் வர
உள்ளார். பின் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நெல்லை பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்திற்கு
வந்து இறங்குகிறார்.
அங்கிருந்து நெல்லை பெருமாள்புரம் என்.ஜி.ஓ காலனியில் உள்ள பாஜக
மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டிற்கு அமித்ஷா காரில் புறப்பட்டு செல்கிறார்.
அங்கு தேநீர் விருந்தில் பங்கேற்று விட்டு மீண்டும் கார் மூலம் சாலை மார்க்கமாகவே நெல்லை
வண்ணார்பேட்டை வடக்கு புறவழிச் சாலை வழியாக பாஜக நிகழ்ச்சி நடைபெறும் விழா மேடைக்கு
வருகிறார். இந்த மாநாட்டில் அமித்ஷா சுமார் ஒரு மணி நேரம் உரையாற்றுவார் என்று கூறப்படுகிறது.
பாஜக நிர்வாகிகள் இடையே பேசும் அமித்ஷா, பாஜக ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு
கொண்டு வரப்பட்டுள்ள திட்டங்களை பட்டியலிட்டு பேசுவதுடன் கூட்டணி கட்சியுடன் இணைந்து
தேர்தல் பணியாற்றுவது குறித்தும் நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்குவார் என்று தகவல்
வெளியாகி உள்ளது.
இந்த மாநாட்டில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும்
முன்னாள் தலைவர்களான தமிழிசை சௌந்தரராஜன், அண்ணாமலை, பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா
உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர். அதிமுகவில் எத்தனை சீட் வாங்குவது என்பது குறித்து
இன்று முடிவு எடுக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.