Share via:
தமிழக ஆளுநர் ரவிக்கும் தி.மு.க. அரசுக்கும் ஆரம்பம் முதலே மோதல்
நிலவி வருகிறது என்றாலும் கடந்த சுதந்திர தினத்தன்று யாரும் எதிர்பாராத வகையில் டீ
பார்ட்டியில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டது பெரும் திருப்பமாக கருதப்பட்டது. இந்த
நிலையில் சட்டசபை நிகழ்ச்சிக்குப் பிறகு ஆளுநரும் தி.மு.க. அரசும் கடுமையான மோதலை தொடர்ந்து
வருகிறது. முரசொலியில் ஆளுநருக்கு மிகக் கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவைக்கு வருகை தந்த ஆளுநர் தேசிய கீதத்தை முன்வைத்து வெளிநடப்பு
செய்தார். இதை சட்டமன்றத்திலே கண்டித்த ஸ்டாலின் கலைஞரின் (கருணாநிதி) பிரபலமான திரைப்பட
வசனத்தைப் போலவே, ‘நீதிமன்ற மண்டபம் நிறைய விசித்திரமான வழக்குகளைக் கண்டிருக்கிறது’,
இந்த சட்டமன்றமும் ஆளுநரைப் பொறுத்தவரை விசித்திரமான காட்சிகளைக் கண்டிருக்கிறது. ஆளுநர்
சபைக்குள் நுழைந்தாலும், உரை நிகழ்த்தாமல் வெளியேறுகிறார்” என்று கிண்டல் செய்தார்.
மேலும், “இந்த அவை கோடிக்கணக்கான மக்களின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட நூற்றாண்டு
பழமையான நிறுவனம். மக்களின் உணர்வுகளுக்கு எதிராகவும், அரசியல் நோக்கங்களுடன் நீண்டகாலமாக
நடத்தப்பட்ட மாநாடுகளை அவமதித்தும் ஆளுநர் நடந்து கொண்டதை இது ஒருபோதும் கண்டதில்லை”
என்று அவர் கூறினார்.
இதற்கு ஆளுநர் ஒரு அரசியல்வாதியைப் போலவே, ’’தேசிய கீதத்துக்கு
உரிய மரியாதையை வலியுறுத்துவதையும், அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள அடிப்படைக் கடமைகளைச்
செய்யச் சொல்வதையும் “அபத்தமானது” மற்றும் “சிறுபிள்ளைத்தனமானது”
என்று வற்புறுத்துகிறார். பாரதத்தை ஒரு தேசமாகவும் அதன் அரசியலமைப்பாகவும் ஏற்றுக்கொள்ளாத
மற்றும் மதிக்காத ஒரு தலைவராக இருக்கும் அவர், கூட்டு நலன்கள் மற்றும் சித்தாந்தங்களின்
உண்மையான நோக்கங்களை வஞ்சகம் செய்ததற்கு நன்றி. இத்தகைய ஆணவம் நல்லதல்ல. பாரதமே உயர்ந்த
தாய் என்பதையும், அவளது குழந்தைகளுக்கு அரசியலமைப்பே உயர்ந்த நம்பிக்கை என்பதையும்
மறந்துவிடாதீர்கள். அவர்கள் இத்தகைய வெட்கக்கேடான அவமானத்தை விரும்பவோ பொறுத்துக்கொள்ளவோ
மாட்டார்கள்’’ என்று கடுமையான வார்த்தைகளால் கண்டனம் தெரிவித்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் ‘ஆளுநர் மாளிகையே அடங்கு’ என்கிற
தலைப்பில், திமுக நாளேடான முரசொலி கட்டுரையை வெளியிட்டிருக்கிறது. அந்த கட்டுரையில்,
‘”சட்டசபைக் கூட்டத்தில் ஆண்டின் தொடக்கத்தில் ஆளுநர் உரையாற்ற வேண்டும்
என்பது மரபு. ஆளும் கட்சி, எழுதித்தரும் உரையை வாசிக்க வேண்டும் என்பதே நெறிமுறை.
இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் அனைத்து ஆளுநர்களும் இதனையே முறையாகக்
கடைப்பிடித்து அரசியலமைப்புச் சட்டப்படி நடந்து கொள்கிறார்கள். ஆர்.என்.ரவியைப்
போல் அழிச்சாட்டியம் செய்பவர்கள் ஒரு சிலரே! அரசியலமைப்புச் சட்டப்படி
நடந்து கொள்ளாதவர் மட்டுமல்ல; சட்டத்தை மீறியே செயல்படுபவர் தமிழ்நாட்டுக்கு
ஆளுநராக வந்துள்ளார். நாகலாந்தில் இருந்து விரட்டி விடப்பட்ட அல்லது பயந்து
போய் ஓடிவந்து கிண்டியில் ஒளிந்திருக்கிறார்.
தேசிய கீதம் பாடச் சொன்னாராம், அரசியலமைப்பு சட்ட கடமையை இவர் செய்யச் சொன்னாராம்,
இதை ‘சிறுபிள்ளைத்தனமானது’ என்று முதலமைச்சர் சொன்னது குற்றமாம். பேச வந்து,
பேசாமல் போனதைத்தான் ‘சிறுபிள்ளைத்தனமானது’ என்றார் முதலமைச்சர். உரையை
வாசிக்க நாள் குறித்து, கிண்டியில் இருந்து புறப்பட்டு வந்து, அணிவகுப்பு மரியாதையை
ஏற்றுக்கொண்டு, அவைக்குள் வந்து, வாசிக்கப்போகும் நேரத்தில் வாசிக்காமல் திரும்பி
ஓடுவது ‘சிறுபிள்ளைத்தனம்’ அல்லாமல் வேறு என்ன? தேசியகீதம் பாடச் சொல்வதை
சிறுபிள்ளைத்தனம் என்று சொல்லவில்லை. அரசியலமைப்பு சட்ட அறிஞர்கள், மேதைகள்,
நீதியரசர்கள் நிறைந்த அவையில் போய்நின்று ரவி, தனது நடத்தையை விவரிக்கட்டும்.
அவர்கள் என்ன சொல்வார்கள்?
ஆளுநர் மாளிகை. பாரதத்தை ஒரு தேசமாகவும், அதன் அரசியலமைப்பாகவும்
ஏற்றுக் கொள்ளாதவர். முதலமைச்சர் என்கிறது அந்த அறிக்கை. அப்படி யாராவது
சொன்னோமா? யார் தேசத் துரோகி என்பதும், தேசத்துரோக வரலாறு யாருக்குச் சொந்தம்
என்பதும் நாட்டு மக்கள் அறிவார்கள். எங்களுக்கு தேசபக்தியை, ஆர்.என்.ரவியிடம்
நாங்கள்கற்க வேண்டிய நிலைமையில் இல்லை. ‘ஆணவம்’ என்கிறது ஆளுநர்மாளிகை. எது
ஆணவம்? ஒரு ரிடையர்டுபோலீஸ் ஆபீஸர், பா.ஜ.க.வின் கூஜா தூக்கியாக இருப்பதால்,
யாரோ ஒருவரின் தயவால் ஆளுநராகி வந்து தமிழ்நாட்டையும், தமிழையும், தமிழ்நாடு
சட்டமன்றத்தையும், கோடிக்கணக்கான மக்களையும் கொச்சைப்படுத்தும் வகையில்
தினந்தோறும் செயல்படுவதுதான் ஆணவம் ஆகும்.
இங்கிருந்து துரத்தப்பட்டால் சீந்துவாரற்று ஏதோ ஒரு பங்களாவில்
பதுங்கி வாழக் கூடிய மாஜி அதிகாரி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சருக்கு
இணையாகஅல்லது அவரை விட மேலாக நினைத்துக் கொள்வது ஆணவத்தை விட தான்தோன்றித்தனம்.
யார் கொடுத்த தைரியத்தில் இந்த ஆணவ ஆட்டத்தை ஆளுநர் மாளிகையில் உட்கார்ந்து போடுகிறீர்?
வரலாற்றின் குப்பைத் தொட்டியில் இப்படி எத்தனையோபேர் போய் விழுந்து கிடக்கிறார்கள்.
தாய்த் தமிழ்நாட்டையும், இந்திய நாட்டின் அரசியலமைப்பையும் காக்க எங்களுக்குத்
தெரியும்.ஆளுநர் மாளிகையே அடங்கு! பிடிக்காவிட்டால் ஓடு” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதோடு தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் வில்சன், ‘’ஆளுநர் ரவிக்கு
தன்னிலை மறந்துவிட்டதா? ஆளுநர் எனும் பொறுப்பிற்கு அவமானச்சின்னம் அவர். தமிழக அரசையும்,
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களையும் தொடர்ந்து எதிர்முகமாக எண்ணும் அவரது போக்கும்,
தி.மு.க.வுடன் கருத்தியல் மற்றும் அரசியல் போரில் ஈடுபடுவதும் அரசியல் சாசன பதவிக்கு
அவர் தகுதியற்றவர் என்பதைக் காட்டுகிறது. அரசியல்வாதியாக வேண்டும் என்ற ஆசை இருந்தால்
அவர் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் போட்டியிட வேண்டும். 52 ஆண்டுகளாக
தேசியக் கொடியை ஏற்றாத ஒரு அமைப்பின் கைக்கூலிகள் தமிழகத்திற்கு தேசபக்தி குறித்து
சொற்பொழிவாற்றுவது வேடிக்கையாக உள்ளது.
எங்களைப் பொறுத்தவரை, இந்தியாவும் தமிழகமும் எங்கள் இரண்டு கண்களைப்
போன்றவை – இரண்டும் சம அளவில் முக்கியமானவை. ஒருவரை மகிழ்விக்க வேண்டும் என்பதற்காக
நாங்கள் மற்றொருவரை காயப்படுத்துவதில்லை. அதை நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது
திரு.ரவி அவர்களே.. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அரசியலமைப்பு கண்ணியத்தை நீங்கள் அவமதித்திருக்கும்
போது, அந்த அரசியலமைப்பைப் பற்றி பேச உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை. மாண்புமிகு
உச்சநீதி மன்றம் கூட உங்களுக்கு குட்டு வைத்து உங்கள் வேலையைச் சரியாகச் செய்யச் சொல்ல
வேண்டியுள்ளது !.
மேதகு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களின் இத்தகைய சட்டவிரோத செயல்களுக்கு
ராஜ் பவனில் உள்ள அரசு ஊழியர்கள் உதவுவதைக் கண்டு நான் ஆச்சரியம் கொள்கிறேன். அவர்கள்
தமிழ்நாடு அரசின் ஊழியர்கள் என்பதையும், தமிழ்நாடு அரசையோ அதன் கொள்கைகளையோ விமர்சிப்பது,
நடத்தை விதிகளின்படி ஒரு அரசுப் பணியாளரை பணிநீக்கம் செய்வதற்கு போதுமான காரணம் என்பதையும்
அவர்களுக்கு நினைவூட்ட வேண்டும்’’ என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்.
ஆஹா… மோதல் சூடாகியிருக்கிறது.