Share via:
பெருந்தலைவர் காமராஜரை திட்டமிட்டு அவமானப்படுத்தும் வேலையை தி.மு.க.வினர்
செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். இதற்கு தென் தமிழகத்தில் நாடார் இன மக்கள் வாக்குகளால்
வெற்றி அடைந்த கனிமொழியும் அமைதி காப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. காமராஜரை
அவமானப்படுத்துவதே, கனிமொழியின் செல்வாக்கை குறைப்பதற்கு நடக்கும் மறைமுக சதி என்றும்
பேச்சு எழுந்திருக்கிறது.
சமீபத்தில் தி.மு.க. மாணவர் அணியைச் சேர்ந்த ராஜீவ்காந்தி, ‘’நீதிக்
கட்சி கொண்டுவந்த பள்ளிகளை எல்லாம் ராஜாஜி மூடினார். அந்த பள்ளிகளைத் தான் காமராஜர்
மீண்டும் திறந்தார். அவர் புதிதாக ஒன்றும் தொடங்கவில்லை’’ என்றும் பெரியார் தான் எல்லாவற்றுக்கும்
காரணம், காமராஜ் கல்விக் கண் திறக்கவேயில்லை, அவர் பணத்தில் எதையும் கட்டவில்லை’’ என்று
பேசியிருக்கிறார். இதையடுத்து நாடார்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி தோன்றியிருக்கிறது.
ராஜீவ்காந்தி பேச்சுக்கு நாடார் அமைச்சர்கள் மற்றும் கனிமொழி உள்ளிட்ட
தி.மு.க.வினர் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்,
பா.ஜ.க. தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன் ஆதாரங்களுடன் கடுமையான கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
’’பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகள்
அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி கொண்டு வந்தார் அதற்காக அழகப்பன் கமிட்டி அமைத்து முழுவதுமாக
ஆராய்ந்தார்…. 6000 மூடிய பள்ளிகளைத் திறந்ததார்… 12000 புதிய பள்ளிகளை திறந்தார்
… 500 மக்கள் தொகை கொண்ட கிராமம் தோறும் பள்ளிகள் திறந்தார்… மிகக் குறைந்த மக்கள்
தொகை கொண்ட கிராமத்திற்கு ஒரு ஆசிரியர் பள்ளிகள் திறந்தார்.
பள்ளிகள் திறந்தாலும் பசியோடு குழந்தைகள் படிக்க முடியாது என்பதால்
மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். அதனால் 8 ஆண்டுகளில் பள்ளிக்கு வந்த மாணவர்களின்
எண்ணிக்கை இரட்டிப்பானது… கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் செயல் வீரராக
இருந்தார்…. அவரின் கல்வித் திட்டத்தால் தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பமும் பயன்பெற்று
இருக்கிறது…. சொந்த காசிலா அவர் பள்ளிக்கூடங்களை திறந்தார் என்று கேள்வி கேட்கிறீர்களே?
பெரியார் பெயரில் இன்றளவும் இயங்கிக்கொண்டிருக்கும் தஞ்சை பெரியார்
பல்கலைக்கழகம் போன்ற பெரியாரின் சொத்துக்கள் எல்லாம் எப்படி வந்தது என்பதை உங்கள் இனமான
தலைவர் என்று தனக்குத்தானே பட்டம் சூட்டிக்கொண்டிருப்பவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்….
திமுகவினரின் இந்த ஆணவ பேச்சுகளால் பெருந்தலைவர் காமராஜரால் பலன் பெற்ற பலரது மனம்
புண்பட்டு இருக்கிறது… கல்விக்கு பெரியார் தான் காரணம் என்று சொல்வது உங்களின் பொய்யுரை….
பெரியார் வாய் சொல் வீரராக மட்டுமே இருந்தார்…. உடனே தமிழக முதல்வர் தலையிட்டு திமுக
நிர்வாகி ராஜுவ் காந்தியை கண்டிப்பது மட்டுமல்லாமல் இந்த வார்த்தைகளை திரும்ப பெற வேண்டும்’’
என்று கொதித்திருக்கிறார்.
காமராஜர் குறித்து ராஜீவ்காந்தி இப்படி அவமானமாக பேசியும் காங்கிரஸ்
கட்சியினர் வாய் திறக்கவேயில்லை என்பது தான் ஆச்சர்யம். கனிமொழி இதை கண்டிப்பாரா அல்லது
உதயநிதிக்குப் பயந்து வாய் மூடி இருப்பாரா..?