Share via:
திரைத்துறையில் தி.மு.க. ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதற்கு லியோ திரைப்படம் தான் உதாரணம் என்று வானதி சீனிவாசன் பகிரங்கமாக குற்றம்சாட்டி பேசினார்.
கோவை டாடாபாத் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு நடுநிலைப்பள்ளியில் மியாவாக்கி முறையில் குறுங்காடுகள் வளர்க்கும் விருட்சம் என்ற திட்டத்தை கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வானதி சீனிவாசன் தொடங்கி வைத்தார். மரக்கன்றுகளை நட்டு திட்டத்தை தொடங்கி வைத்த அவர் அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அவர் பேசும்போது, ‘‘விருட்சம் திட்டத்தின் மூலம் கோவை மாநகராட்சியில் உள்ள 7 பள்ளிகளில் குறுங்காடுகள் வளர்க்கும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளதாக தெரிவித்தார். மக்களவை தேர்தலுக்கு பின் அண்ணாமலையின் வண்டவாளங்கள் ட்ரங்க் பெட்டியில் ஏற்றப்படும் என்று சேகர்பாபு கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த வானதி சீனிவாசன், தி.மு.க. பைல்ஸ், எக்ஸ்பிரசில் ஏறுகிறதா, ஜெட்டில் ஏறுகிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்’’ என்று தெரிவித்தார்.
அதற்கு பின்னர் லியோ திரைப்படம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், ‘‘தி.மு.க.திரைத்துறையில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. தி.மு.க. ஆட்சியில் ஆட்சியாளர்கள் மட்டுமே செழிப்பாக வாழ முடியும். எந்த திரைப்படத்தை பார்த்தாலும் ரெட் ஜெயண்ட் தான். அதைத் தாண்டி யாராவது திரைப்படத்தை வெளியிட முயற்சித்தால் அவர்களுக்கு தியேட்டர்கள் கிடைக்காது. அதற்கு சிறந்த உதாரணம் என்றால் அது லியோ திரைப்படம்தான் என்று குற்றம்சாட்டி பேசினார். மேலும் இது முதல் முறையல்ல என்று கூறிய அவர், இதற்கு முன்னர் இப்படி நடந்து கொண்டதால்தான் தி.மு.க. ஆட்சி தூக்கி எறியப்பட்டது என்று எச்சரிக்கைவிடுக்கும் வகையில் வானதி சீனிவாசன் பேசினார்.
லியோ திரைப்படம் சந்தித்து வரும் சிக்கல்களுக்கு இடையில் வானதி சீனிவாசனின் இதுபோன்ற பகிரங்க பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி பல சந்தேகங்களை எழுப்பி வருகிறது.