Share via:
சேலத்தை கலகலக்கச் செய்யும் வகையில் தி.மு.க. இளைஞர் அணியின்
2வது மாநில மாநாட்டை மாணவரணிச் செயலாளர் எழிலரசன் இன்று திறந்துவைத்தார். இதையடுத்து
தி.மு.கழக இளைஞர் அணியின் 2வது மாநில மாநாட்டில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
கலைஞர் உதவித்தொகை, நான் முதல்வன் உள்ளிட்ட திட்டங்களுக்காக ஸ்டாலினுக்குப்
பாராட்டு தெரிவித்திருக்கும் இளைஞர் அணி, இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராக தமிழ்நாட்டை
மாற்றிவரும் மாண்புமிகு அமைச்சர் என்று உதயநிதிக்கு பாராட்டுத் தீர்மானம் நிறைவேறியுள்ளது.
நீட் ஒழிக்கப்படும்வரை ஜனநாயக முறையிலான போராட்டங்களையும், சட்ட
வழியிலான போராட்டங்களையும் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு ஒரு தீர்மானம் நிறைவேறியுள்ளது.
குலக்கல்வி முறையைப் புகுத்தும் தேசியக் கல்விக் கொள்கையை எதிர்த்துப் போராட்டம், மாநிலப்
பட்டியலுக்குக் கல்வி-மருத்துவத்தை மாற்றுவதற்கு வலியுறுத்தல், முதலமைச்சரே பல்கலைக்கழக
வேந்தர் சட்டத்தை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தல், ஆளுநர் பதவியை நிரந்தரமாக அகற்றிட
வேண்டும் என்று கோரிக்கை வைத்திருப்பதுடன் அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளைக் கைப்பாவையாக்கிய
ஒன்றிய பா.ஜ.க. அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்துக்களின் உண்மையான எதிரி பா.ஜ.க.தான் என்பதை அம்பலப்படுத்துவோம்
என்றும் பா.ஜ.க ஆட்சியை வீழ்த்திடும் முன்கள வீரர்களாக இளைஞர் அணி செயல்படும் என்றும்
நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கான சூளுரை மேற்கொள்வதாகவும் தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டுள்ளன.
முன்னதாக நேற்று இந்த மாநாட்டின் முக்கியத்துவத்தை உணர்த்தும்
வகையில் மாநாட்டுத்திடலில் 1500 ட்ரோன்களைக் கொண்டு வான்வெளியில் ஒளி வீசச்செய்த டிரோன்
ஷோ நட்சத்திரங்களுக்குப் போட்டியாக அமைந்தது. ஹைடெக் தொழில்நுட்பத்தை அரசியலுக்குக்
கொண்டுவருவதில் தி.மு.க.வே முன்னோடி என்பதைக் காட்டி அசத்தினார்கள். அதேநேரம், குத்தாட்ட
ரசிகர்களை மயக்கும் வகையில் ஆபாச ஆடல், பாடல், விதவிதமாக உணவுகள் என்று சேலத்துக்கே
கொண்டாட்டம்தான்.
நேற்றைய நிகழ்வுக்கு உதயநிதியின் மகன் இன்பநிதி கலந்துகொண்டதாக
வெளியான புகைப்படம் பெரும் வைரலாகி வருகிறது. ஆக, இளைஞர் அணிக்கு அடுத்த தலைவர் ரெடி.