Share via:
கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் (எம்.எச்.ஏ.ஏ.) தேர்தல் நடத்தப்பட்டு, புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்தலில் எப்படியும் வெற்றி அடையவேண்டும் என்று போட்டியிட்ட பா.ஜ.க.வை சேர்ந்த பால்கனகராஜ் தோற்றுப்போயிருப்பது, கட்சியினரை வருத்தத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டிய இந்த தேர்தல் கடந்த 2016ம் ஆண்டுக்குப் பிறகு நடத்தப்படவில்லை. பல்வேறு வழக்குகளைத் தாண்டி தேர்தல் நடத்தும் அலுவலராக மூத்த வழக்கறிஞர் கபீர் நியமிக்கப்பட்டு நேற்று நடைபெற்றது.
இந்த வழக்கறிஞர் சங்கத்தில் பதிவு செய்துள்ள வழக்கறிஞர்களில் வாக்களிக்க தகுதியான 4,752 வழக்கறிஞர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இந்தத் தேர்தலில் தலைவர், துணைத் தலைவர், செயலாளர், பொருளாளர், நூலகர், 6 மூத்த செயற்குழு உறுப்பினர்கள், 5 இளநிலை செயற்குழு உறுப்பினர்கள் என மொத்தம் 16 பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. தலைவர் பதவிக்கு 9 பேரும், துணைத் தலைவர் பதவிக்கு 8 பேரும், செயலாளர் பதவிக்கு 10 பேரும், பொருளாளர் பதவிக்கு 9 பேரும், நூலகர் பதவிக்கு 11 பேரும், மூத்த செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு 42 பேரும், இளைய செயற்குழு உறுப்பினர் பதவிக்கு 35 பேரும் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் 1,301 வாக்குகள் பெற்று சங்கத்தின் தலைவராக ஜி.மோகனகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டார். தலைவருக்கான தேர்தலில் போட்டியிட்ட பால் கனகராஜ் 1134 வாக்குகளும், வேல்முருகன் 734 வாக்குகளும் பெற்றனர்.
தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி.மோகனகிருஷ்ணன், கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் வெற்றி பெற்று, சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்காக தி.மு.க.வை சேர்ந்த முக்கியப் புள்ளிகளும் வழக்கறிஞர்களும் களம் இறங்கி பணியாற்றியதாக சொல்லப்படுகிறது.
அதேநேரம் எதிர் புறமும் பணம் புகுந்து விளையாடியிருக்கிறது. தமிழக பா.ஜ.க.வின் சட்டப்பிரிவு செயலாளராக உள்ள ஆர்.சி.பால்கனகராஜ், இந்த சங்கத்திற்கு முன்பு தலைவராக இருந்திருக்கிறார். ஆகவே, போட்டி கடுமையாக இருந்தது. ஆனாலும், மோகனகிருஷ்ணன் ஜெயித்து வெற்றிவாகை சூடியிருக்கிறார்.
தமிழ்நாட்டில் பா.ஜ.க. பேரைச் சொல்லி கவுன்சிலர்கூட ஜெயிக்க முடியாது போலத் தெரியுதே…