சென்னையில் வீட்டு வேலைக்காக அழைத்து வரப்பட்ட தலித் சிறுமி சித்ரவதை செய்து குரூரமாக கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் மிகப்பெரும் அரசியல் சதி இருப்பதாக கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.வை கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்துப் பேசும் கம்யூனிஸ்ட் கட்சீயீனர், ‘’வேலைக்கார சிறுமியை கொடூரமாக கொலை செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் சிறுமியின் தாயாரைக் கூட்டிவந்து ஸ்டேஷனில் மிரட்டி பொய்யாக ஒரு கதையை உருவாக்கியிருக்கிறார்கள். உண்மையை ஆளும் கட்சி மூடி மறைக்கப் பார்க்கிறது. அதனால் தான் எந்த அரசியல் கட்சியினரும் குடும்பத்தை சந்தித்து இரங்கல் தெரிவிக்கவில்லை. ஊடகங்களும் உண்மையை நோக்கிப் போகாமல் காவல் துறை கொடுக்கும் செய்தியை மட்டுமே போடுகிறார்கள். இந்த கொலைக்குப் பின் இருக்கும் ஆளும் கட்சியின் எம்.எல்.ஏ.வை கைது செய்ய வேண்டும். அது வரை எங்கள் போராட்டம் நிற்கப்போவதில்லை’’ என்று தெரிவித்துள்ளனர்.

வேலைக்கார சிறுமி கொலையில் என்ன நடந்தது என்பதைப் பார்த்துவிடலாம். அமைந்தகரை மேத்தா நகர், சதாசிவ மேத்தா தெருவில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் முகமது நிஷாத் (35). இவர், பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது வீட்டில், கடந்த 2 ஆண்டுக்கு முன், தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த அருந்ததி (16) என்ற சிறுமியை வீட்டு வேலைக்காக சேர்த்துள்ளனர்.

இந்த சிறுமி, முகமது நிஷாத் வீட்டில் தங்கியிருந்து, வீட்டு வேலைகளை செய்து வந்துள்ளார். இந்நிலையில், முகமது நிஷாத், தனது வீட்டில் வேலை செய்து வந்த சிறுமி, தீபாவளி பண்டிகையின்போது குளியல் அறையில் மயங்கி விழுந்து இறந்துவிட்டதாக, கடந்த 2 நாட்களுக்கு முன், தனது வழக்கறிஞர் மூலம், அமைந்தகரை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, குளியல் அறையில் இறந்து கிடந்த சிறுமி சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், முகமது நிஷாத்திடம் விசாரித்தபோது, ‘‘தீபாவளி அன்று குளிக்க சென்ற சிறுமி, நீண்ட நேரமாகியும் வெளியே வராததால், சந்தேகமடைந்து கதவை தட்டினோம். நீண்ட நேரம் ஆகியும் கதவை திறக்காததால், பயந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, சிறுமி தரையில் மயங்கிய நிலையில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தோம். பின்னர், என்ன செய்வது என்று தெரியாமல் வீட்டை பூட்டிவிட்டு, மனைவி நிவேதா மற்றும் குழந்தையுடன் உறவினர்கள் வீட்டிற்கு சென்று விட்டேன்,’’ என்று கூறியுள்ளார்.

சிறுமியின் உடலில் அங்காங்கே காயங்கள், சிகரெட் சூடு வைத்த காயங்கள் இருந்ததால் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து முகமது நிஷாத் மற்றும் அவரது மனைவி நிவேதா ஆகியோரை காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். அதில், பல திடுக்கிடும் தகவல் வெளிவந்தது.

நிவேதா என்ற நாசியாவின் ஒப்புதல் வாக்குமூலத்தில், ‘’கோவை தென்னம்பாளையத்தில், எங்கள் உறவினர் வீட்டுக்கு சென்று இருந்த போது, அங்கு வீட்டு வேலை செய்து வந்த சிறுமியின் தாயை சந்தித்தோம். அவரிடம் பேசி, எங்கள் குழந்தையை கவனித்துக் கொள்ள, சிறுமியை எங்கள் வீட்டுக்கு அழைத்து வந்தோம். சிறுமியின் தந்தை இறந்து விட்டார். ஒரு மகனுடன் அவரது தாயும் ஏழ்மை நிலையில் உள்ளார். சிறுமியை அடிமை போல நடத்தினோம்; போதிய சம்பளமும் தரவில்லை. அவரது தாயை சந்திக்கவும் அனுமதிக்கவில்லை.

நான்கு மாதத்திற்கு முன்புதான், சிறுமி பெரிய பெண் ஆனார். அவர் சொந்த ஊருக்கு சென்றால், மீண்டும் வர மாட்டார் என்பதால் நாங்கள் அனுப்பவில்லை. என் கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளது. இதனால், எங்களுக்குள் தினமும் தகராறு ஏற்படும். சிறுமி கறுப்பாக இருந்தாலும் அழகாக இருப்பார். அதனால், என் கணவரின் பார்வை சிறுமியின் பக்கம் திரும்பியது. அதில், எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. எனவே, வேண்டுமென்றே சிறுமியின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறி என் கணவருக்கு வெறுப்பை உண்டாக்கினேன்.

அவள் என்ன வேலை செய்தாலும் அதில் குறை கண்டுபிடித்து திட்டுவேன். அவளுடைய நெஞ்சுப் பகுதியில் நான் தான் அயர்ன் பாக்ஸ் வைத்து சூடு வைத்தேன். அவளுடைய பிறப்பு உறுப்பிலும் சூடு வைத்தேன் ஆனாலும் என் ஆத்திரம் அடங்கவே இல்லை.

தீபாவளியன்று எங்கள் வீட்டுக்கு லோகேஷ், ஜெயசக்தி என் கணவரின் சகோதரி சீமா பேகம் ஆகியோர் வந்தனர். அப்போது, என் மகனின் பிறப்பு உறுப்பை வேலைக்கார சிறுமி பிடித்து இழுத்ததாக குற்றம் சாட்டினேன். எல்லோரும் சேர்ந்து அடித்தார்கள். என் கணவர் தூக்கிப் போட்டு மிதித்ததில் அவளுக்கு மூச்சு நின்றுவிட்டது. உடனே அவள் உடலை குளியல் அறையில் போட்டுவிட்டு நாங்கள் கிளம்பிவிட்டோம். சடலத்தை மறைக்க முடியாமல் போகவே, போலீஸுக்கு வேறு வகையில் தகவல் கொடுத்தோம்’’ என்று கூறியிருக்கிறார்.

இந்த கொலை வழக்கு மற்றும் போக்சோ சட்டப்பிரிவுகளுக்கு மாற்றம் செய்யப்பட்டு எதிரிகள் நிவேதா (எ) நாசியா(30), அவரது கணவர் முகமது நிஷாத்(36), லோகேஷ்(26), அவரது மனைவி ஜெயசக்தி(24), கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்த மகேஸ்வரி(40) மற்றும் முகமது நிஷாத்தின் சகோதரி அடையாரைச் சேர்ந்த சீமா பேகம்(39) ஆகியோர் 02.11.2024 அன்று கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 6 நபர்களும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.’

இந்த கொலையை காவல் துறை சரியாகக் கையாளவில்லை என்றும் விசாரணை போதுமான அளவு நகரவில்லை. இந்த விஷயத்தில் தொடர்புடைய தி.மு.க. எம்.எல்.ஏ.வை கைது செய்ய வேண்டும் என்றே கம்யூனிஸ்ட் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நியாயம் கிடைக்க வேண்டும்..? மூடி மறைப்பது தான் திராவிட மாடலா ஸ்டாலின்..?

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link