Share via:
காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் இயங்கி வருகிறது சாம்சங் தொழிற்சாலை. அங்கு பணியாற்றி வரும் பணியாளர்கள் 8 மணிநேர வேலை, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில வாரங்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பந்தல் அமைத்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்களிடம் பல்வேறுகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் எந்த சுமூகமான முடிவும் எட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்கள் சார்பாக தொழிற்சங்க நிர்வாகிகள் 10 பேரை போலீசார் குண்டுகட்டாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இதை எதிர்த்து அ.தி.மு.க., பா.ம.க., நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாப்பது தான் தங்களின் முதன்மை நோக்கம் என்று தமிழக அரசு கூறி வரும் நிலையில, இப்போது சாம்சங் நிறுவனத்தின் கையாளாக மாறி, தொழிற்சங்க நிர்வாகிகள் 10 பேரை கைது செய்து அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டு வருகிறது என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அதே போல் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:&
சமத்துவம், சம உரிமை, சமூகநீதி ஆகியவற்றின் காவலர்கள் என்று தங்களை தி.மு.க. ஆட்சியாளர்கள் தற்பெருமை பேசிக்கொள்கிறார்கள். ஆனால் உரிமைக்காக போராடும் தொழிலாளர்களின் பக்கம் நிற்காமல், சாம்சங் நிறுவனத்தின் தொழிலாளர் விரோதப் போக்கிற்குத் துணைபோவது நம்முடைய தொழிலாளர்களுக்கு செய்கின்ற பச்சைதுரோகம் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும் தமிழக அரசு காஞ்சிபுரம் சாம்சங் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் கோரும் அறப்போராட்டத்தை ஒடுக்குவதை கைவிட வேண்டும். அதோடு கைது செய்யப்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் 10 பேரை எந்த வித வழக்கும் இல்லாமல் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் சாம்சங் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி, தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைளை நிறைவேற்றித்த வேண்டும் என்று அறிக்கையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.