Share via:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. பண்டிகைக்கு இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்ள மக்கள் ஆயத்தமாகி வருகின்றனர். படிப்பு, வேலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக சொந்த ஊர்களை விட்டு சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் மக்கள் தங்கியுள்ளனர்.
பண்டிகையை சொந்த ஊர்களில் உறவினர்களுடன் சேர்ந்து கொண்டாடும் விதமாக பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று ஏற்கனவே தமிழக போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதேபோல் பண்டிகையை கொண்டாடி முடித்த பின்னர் சென்னைக்கு திரும்பவும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தெற்கு ரெயில்வே அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், திருநெல்வேலியில் இருந்து நவம்பர் 3ம் தேதி மதியம் 2 மணிக்கு புறப்படும் அதிவிரைவு ரெயில் மறுநாளான 4ம் தேதி அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும். மறுமார்க்கமாக அதாவது தாம்பரத்தில் இருந்து நவம்பர் 4ம் தேதி திங்கட்கிழமை மதியம் 2.30 மணியளவில் புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரெயிலானது மறுநாள் (5ம் தேதி) காலை 5.15 மணியளவில் திருநெல்வேலியை சென்றடையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது