Share via:

இந்தியைத் திணிக்க முயலும் மோடி அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்
வகையில் ரூபாய்க்கான குறிபீட்டை ஸ்டாலின் நீக்கியிருப்பது தேச விரோதச் செயல் என்று
மத்திய நிதியமைச்சர் கடுமையாக கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து நிர்மலா சீதாராமன், ‘’மாநில பட்ஜெட் ஆவணங்களில்
‘₹‘ போன்ற
தேசியச் சின்னத்தை நீக்குவது, அரசியலமைப்பின் கீழ் மக்கள் பிரதிநிதிகள் எடுக்கும் உறுதிமொழிக்கு
எதிரானதாகும் பிராந்தியப் பெருமை என்ற போர்வையில் பிரிவினைவாத உணர்வைப் பரப்பும் ஆபத்தான
மனநிலையைக் குறிக்கிறது. மொழி மற்றும் பிராந்திய பேரினவாதத்திற்கு உதாரணமாக இது உள்ளது.”
என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் பா.ஜ.க.வினர், ‘’ஸ்டாலின் “₹“க்கு
பதிலாக “ரூ” என திமுக கையிலெடுத்திருப்பது தேசப் பிரிவினை சிந்தனைக்கு சமமான
செயல்பாடு. மேலும், “தென் இந்தியா vs வட இந்தியா” என்ற பாகுபாட்டு அரசியலை
முன்னெடுப்பதிலும் திமுக தலைவர் ஸ்டாலின் மிகவும் முனைப்பு காட்டுகிறார். “பிஜேபி
எதிர்ப்பு, சங்கி எதிர்ப்பு, இந்து மதவாத எதிர்ப்பு” என்ற பெரிய போர்வைக்குள்
ஒளிந்து கொண்டு இந்திய தேசிய சிந்தனைக்கு எதிரான செயல்பாடுகளில் மாநில ஆளுங்கட்சி செயல்படுவது
ஆரோக்கியமான செயல்பாடு அல்ல. எனவே தி.மு.க. ஆட்சியைக் கலைக்க வேண்டும்’’ என்று கோரிக்கை
வைக்கிறார்கள்.
இதற்கு தி.மு.க.வினர், ‘’இந்திய அரசியலமைப்பு சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட
எங்கள் தாய் மொழி தமிழில் “ரூ”என சொல்வதை பிராந்தியவாதம் பிரிவினைவாதம் என்றால் எங்கள்
மீது இந்தியின் முதல் எழுத்து ‘₹‘ திணிப்பது என்ன வாதம்? இந்தி மட்டும்
தான் இந்தியாவின் அடையாளமா?’’ என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
அதோடு ஜோதிமணி எம்.பி., ‘’எமது வரிப்பணத்தை ,எமது மக்களுக்கு உரிமையுள்ள நிதியை ,இயற்கைப் பேரிடர்களால், எமது
மக்கள் பெரும் துயரில் துடிக்கும்போது கூட
கொடுக்க மறுப்பதற்கு என்ன பெயர்? நீங்கள் செய்வது
தான் அப்பட்டமான மொழி, பிராந்தியப் பேரினவாதம். அதற்குப் பணிய மறுப்பதும்,நீ ங்கள்
அழிக்கத்துடிக்கும் எமது அடையாளங்களைப் போற்றிப் பாதுகாத்து முன்னிறுத்துவதுமே எமது எதிர்வினை. அதற்கு நீங்கள் என்ன பெயர் வேண்டுமானாலும்
வைத்துகொள்ளலாம்.
எங்களைப் பொறுத்தவதை இது எமது இனத்தின் அடையாளம். எமது எட்டு கோடி
மக்களின் சுயமரியாதை. எமது உரிமைப் போரிற்கான சங்கநாதம். நாங்கள் இந்த நாட்டை மதிக்கிறோம்.
நேசிக்கிறோம். எமது மண்,உங்களால் கைவிடப்பட்ட லட்சணக்கான வேறு மாநிலங்களைச் சேர்ந்த
,வேற்று மொழி பேசுகிற மக்களுக்குச் சோறிடுகிறது.பிழைப்பிற்காக எமது மண்ணிற்கு வந்த
மக்களின் மொழியை, கலாச்சாரத்தைப்,பண்பாட்டை நாங்கள் மதிக்கிறோம்.அவர்கள் மீது அன்பு செலுத்துகிறோம். எங்களைப் பேரினவாதிகளாகச்
சித்தரிக்கும் உங்கள் முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது. எமது இனமும் மொழியும் இந்திய
தேசத்தின் இதயத்துடிப்பாக இருக்கும். மகத்தான இந்திய தேசத்தின் உயிர்நாடியான வேற்றுமையில்,ஒற்றுமையையும்,
பன்முகத்தன்மையையும் உங்கள் பாஜகவின் பிரிவினைவாத,வெறுப்பு
அரசியலில் இருந்து பாதுகாக்க இந்த தேசத்தை அணிதிரட்டும்’’ என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.
ரூபாய் மதிப்பு குறைந்துவரும் நேரத்தில் ரூபாயை வைத்து இப்படி
ஒரு விளையாட்டு அவசியம்தானா..?