Share via:
அரசு மருத்துவமனையில் மின்சாரம் தடைபட்ட நிலையில் டார்ச் லைட் மற்றும் மொபைல் டார்ச் வெளிச்சத்தில் சிகிச்சை அளிக்கப்பட்ட சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு கோத்தகிரி அருகே இடுக்கொரை பகுதியைச் சேர்ந்த 3 வயது சிறுமி திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் ஆம்புலன்ஸ் மூலமாக கோத்தகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அந்த சமயத்தில் அப்பகுதியில் மின்சாரம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும் மருத்துவமனையில் ஜெனரேட்டரும் இயக்கப்படாமல் மருத்துவமனையில் சிறுமிக்கு மொபைல் டார்ச் மூலமா சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், மருத்துவமனை சமீபத்தில்தான் புனரமைக்கப்பட்டதாகவும், அனைத்து வசதிகளும் செய்யப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது. இருப்பினும் மருத்துவர்கள் டார்ச்லைட் மற்றும் மொபைல் டார்ச் வெளிச்சத்தில் சிகிச்சை அளித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அரசு மருத்துவமனையில் பொதுவாகவே மின்சாரம் தடைபட்டால் நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாவார்கள். அப்படி தவிர்க்க முடியாத பட்சத்தில் மின்தடை ஏற்பட்டால் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் தடையில்லாமல் வினியோகிக்கப்பட வேண்டும். ஆனால் சமீபத்தில் புனரமைக்கப்பட்ட கோத்தகிரி அரசு மருத்துவமனையில் உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து சம்பந்தப்பட்ட அரசு உயர் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் இதுபோன்ற அசம்பாவிதம் மீண்டும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.