Share via:
தனியார் பள்ளிகளுக்கு திடீரென்று தனியார் பள்ளிகள் இயக்குனரம் முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. கிருஷ்ணகிரியில் நடந்த பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது பலரின் ஆதரவை பெற்றுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே கந்திகுப்பம் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி வளாகத்தில் என்.சி.சி. பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் மொத்தம் 17 மாணவிகள் கலந்து கொண்டனர். அதில் சில மாணவிகளை காவேரிப்பட்டினத்தைச் சேர்ந்த 30 வயதான என்.சி.சி. மாஸ்டர் சிவராமன் பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பள்ளியின் முதல்வர் உள்ளிட்ட 9 பேரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் முகாமில் தங்கியிருந்த மற்ற மாணவிகளிடமும் போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து தமிழ்நாடு தனியார் பள்ளிகள் இயக்குனர் பழனிச்சாமி, அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அதில், தனியார் பள்ளிகளில் அனுமதி பெறாமல் என்.சி.சி. உள்ளிட்ட எந்த முகாம்களை நடத்தினாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தனியார் சுயநிதி பள்ளிகளில் செயல்பட்டு வரும் என்.சி.சி., என்.எஸ்.எஸ். ஸ்கவுட் மற்றும் ஜே.ஆர்.சி. அமைப்புகளையும் மாநில அமைப்பிடம் முறையாக பதிவு செய்து அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன் பெயரில் செயல்படும் அமைப்புகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் பயிற்சி பெற்ற ஆசிரியர்களாக இருக்க வேண்டும். அதைவிடுத்து எந்தவொரு அமைப்பையும் பள்ளியில் செயல்பட அனுமதிக்கக் கூடாது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பட மாணவர்களுக்கு ஆசிரியர்களும், மாணவிகளுக்கு ஆசியைகளும் மட்டுமே பயிற்சி அளிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனியார் பள்ளிகள் இயக்குனரகம் அந்த சுற்றறிக்கை வாயிலாக எச்சரிக்கை விடுத்துள்ளது.