Share via:
அரபிக்கடலில் உருவான அஸ்னா புயல் காரணமாக குஜராத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் எல்லாம் வெள்ளம் சூழ்ந்து, மக்கள் வீட்டை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த கனமழைக்கு இதுவரை 49 பேர் பலியானதாகவும் 1,200 பேர் மீட்கப்பட்டதாகவும் சொல்லப்படும் நிலையில், இடி, மின்னல் தாக்கியும் சுவர் இடிந்து விழுந்தும் இன்னமும் பலர் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற தகவல் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இதை விட மோசமாக இந்த வெள்ளத்தில் முதலை, பாம்பு போன்றவை அடித்துவரப்பட்டு வீட்டுக்குள் நுழைந்து மக்களை அலற விட்டுள்ளன.
கேரளாவில் நிலச்சரிவு ஏற்பட்ட நேரத்தில் நாங்கள் மிகச்சரியாக அறிவிப்பு கொடுத்தோம், அதை மாநில அரசு கடைபிடிக்கவில்லை என்பதாலே இத்தனை பெரிய இழப்பு என்று அமித் ஷா குற்றம் சாட்டினார். இப்போது புயல், முதலை பற்றி எல்லாம் குஜராத் முதல்வர் பூபேந்திர படேலுக்கு அமித் ஷா தெரிவிக்கவில்லையா என்று எதிர்க் கட்சிகள் கேள்வி எழுப்புகிறார்கள்.
அதோடு, சின்ன வயதில் மோடி ஆற்றில் விட்டதாகச் சொல்லும் முதலையே இப்போது மோடியைத் தேடி ஊருக்குள் வந்திருப்பதாகவும் கிண்டல் செய்கிறார்கள். இயற்கை பேரழிவை அரசியலாக மாற்றினால், இப்படிப்பட்ட பின்விளைவை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை மோடியும் அமித் ஷாவும் புரிந்துகொள்ள வேண்டும்.