Share via:

டெல்லிக்குச் சென்ற எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் யாரையும்
சந்திக்க வரவில்லை என்று சொன்னார். அதன் பிறகு அமித்ஷாவை சந்தித்தார். அப்போது சந்திப்பு
குறித்து கேட்டபோது இன்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுவதாகச் சொன்னார்.
இன்று, கூட்டணி குறித்துப் பேசவில்லை என்று சமாளித்திருக்கிறார். இதையடுத்து எடப்பாடி
பழனிசாமியின் வேண்டுகோள் ஏற்கப்படவில்லை என்ற பேச்சு உலவுகிறது.
இன்று பத்திரிகையாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘’ஆளுங்கட்சியாக
இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி- மக்கள் பிரச்சனைகளைப் பேசி தீர்வு
காண முனையும் ஒரே கட்சி. எனவே உள்துறை அமைச்சரை சந்தித்துப் பேசினோம். தேர்தலுக்கு
இன்னும் ஓராண்டு காலம் இருக்கிறது. ஊடகங்கள் விறுவிறுப்பான செய்தி வெளியிட எங்களிடம்
போட்டு வாங்க வேண்டாம். கூட்டணி வரும் போகும்; கொள்கை என்றும் நிலையானது’’ என்று சமாளித்துவிட்டார்.
கூட்டணி உறுதி என்று பேசவில்லை.
இதையடுத்து அ.தி.மு.க.வினரிடம் பேசியபோது, ‘’எடப்பாடி பழனிசாமி
கூட்டணிக்குத் தயாராக இருக்கிறார். அதற்கு பா.ஜக.வும் தயாராக உள்ளது. அதேநேரம், சசிகலா,
பன்னீர்செல்வம் இணைப்பு இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறார். ஆனால், இந்த விஷயத்தில்
தனது ஆதரவாளர்களை விட்டுத்தர அமித்ஷா தயாராக இல்லை.
மேலும், டாஸ்மாக் ஊழல் வழக்கில் செந்தில் பாலாஜியை கைது செய்ய
வேண்டும் என்றும் இதில் ஸ்டாலின் அல்லது உதயநிதி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இவற்றில் பா.ஜ.க. எந்த உறுதிமொழியும் கொடுக்கவில்லை.
அதனாலே, கூட்டணியை இப்போது தள்ளிப் போட்டிருக்கிறார். ஆனால், அமித்ஷா வீட்டுக்குப்
போய் பார்த்துப் பேசியதை எந்த அ.தி.மு.க. தொண்டராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதேபோல்
டெல்லி அ.தி.மு.க. அலுவலகத்தில் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி படங்கள் இல்லாமல்
எடப்பாடி பழனிசாமி படம் மட்டும் வைக்கப்பட்டிருப்பதை ரசிக்க முடியவில்லை’’ என்று வருந்துகிறார்கள்.