Share via:
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டுவந்துவிட்டதாக
கேக் ஊட்டி ஸ்டாலின் டீம் கொண்டாடி வருகிறது. ஆனால், இது பழைய ஓய்வூதியத் திட்டம் இல்லை,
பழைய சோறு என்று கிண்டலடித்து அதிரடி காட்டியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
சேலம் மாவட்டம் வீரபாண்டி தொகுதியில் பேசிய இபிஎஸ், ‘’மக்கள் செல்வாக்கு
இழந்து பயத்தில் அஞ்சி புதிய திட்டம் அறிவிக்கிறார். தேர்தல் அறிக்கையில் பழைய ஓய்வூதியத்
திட்டம் நடைமுறைப்படுத்துவோம் என்றார். ஆனால், இப்போது ஒரு புதிய திட்டம் கொண்டுவந்திருக்கிறார்.
அரசு ஊழியர் கேட்பது பழைய ஓய்வூதிய திட்டம். ஆனால் ஸ்டாலின் குறிப்பிடுவது
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம். பெயரை மாற்றி இன்று அவர்களை ஏமாற்றுகிறார். வேலை
நிறுத்தத்தை நிறுத்த தந்திரமாக உத்தரவு வெளியிட்டுள்ளனர். ஸ்டாலின் அவர்களே நீங்கள்
அரசாணை வெளியிடுகிறபோதுதான், அரசு ஊழியர்கள் இந்த அரசைப் பற்றி தெரிந்துகொள்வார்கள்.
திமுக கூட்டணி தடுமாறுகிறது. காங்கிரஸ் இருக்குமா என்றே தெரியவில்லை.
தேர்தல் வருகின்ற வரை உங்கள் கூட்டணி நிலைக்குமா என்ற சந்தேகம் மக்களிடம் வந்துவிட்டது.
திமுக ஆட்சியில் மின்கட்டணம் 67%, வரிகள் 100% முதல் 150% உயர்வு. பீக் ஹவர் கட்டணம்,
குப்பைக்கும் வரி. வரி மேல் வரி போட்டு மக்களுக்கு சுமை கொடுத்திருக்கிறது அரசு.
திமுகவில் உதயநிதியை விட்டால் ஆளே இல்லையா? கருணநிதி குடும்பத்தில்
பிறந்த ஒரே காரணம் தான். எத்தனை முறை ஜெயிலுக்குப் போனார்? திமுகவில் அதிக நாட்கள்
எம்.எல்.ஏவாக இருந்தவர் அண்ணன் துரைமுருகன், கருணாநிதி குடும்பத்தில் பிறக்காததால்
அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. மிசா சட்டத்தில் துரைமுருகனும் பாதிக்கப்பட்டார்,
ஆனாலும், அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.
நான் கிளைச் செயலாளராக பணியைத் துவக்கி படிப்படியாக பொதுச்செயலாளராகி
இருக்கிறேன், சட்டமன்ற உறுப்பினர், எம்.பி அப்புறம் முதல்வர். திமுகவில் இப்படி வரமுடியுமா?
ஸ்டாலின் தலைவர், உதயநிதி இளைஞரணி தலைவர், கனிமொழி மகளிரணி தலைவர். டெல்லியில் கூட
அந்த குடும்பம் தான் பொறுப்புக்கு வரும். இந்த நிலையை வரும் தேர்தலில் மாற்ற வேண்டும்…’’
என்று அதிரடி காட்டியிருக்கிறார்.
ஓய்வூதியத் திட்டம் முழுமையானது இல்லை என்று ஜாக்டோ ஜியோ அமைப்பும்
இன்று அறிக்கை கொடுத்திருக்கிறது. என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்