Share via:
நடிகர் தனுஷின் மகன் ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்ட பழகிய காட்சிகள் இணையத்தில் வெளியான நிலையில், போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி அபராதம் விதித்துள்ளனர்.
நடிகர் தனுசுக்கு யாத்ரா, லிங்கா என்ற 2 மகன்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக தனுசும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களது இல்லம் போயஸ் கார்டனில் அமைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் தனுஷின் மூத்த மகன் யாத்ரா ஆர்15 ரக பைக்கை ஓட்ட போயஸ் கார்டனில் பயிற்சி மேற்கொண்டார். அவருடன் இருந்த உதவியாளர் ஒருவர் யாத்ராவுக்கு பைக்கை எப்படி ஓட்ட வேண்டும் என்று பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்தார். இதில் யாத்ரா ஹெல்மெட் அணியாமல் பயிற்சி மேற்கொண்டார்.
அப்போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாக இணையத்தில் வைரலானது. இதை பார்த்த நெட்டீசன்கள், 18 வயது நிரம்பாத யாத்ரா, பைக் ஓட்ட பழகிய சரியில்லை என்றும், போயஸ் கார்டன் போன்ற பரபரப்பான இடங்களில் பயிற்சி மேற்கொண்டது தவறு என்றும் கருத்து பதிவிட்டனர். ஒரு சிலர் பைக் ஓட்ட பழகியதெல்லாம் ஒரு குற்றம் கிடையாது என்று ஆதரவாக குரல் கொடுத்தனர்.
இந்நிலையில் போக்குவரத்து போலீசார் நடிகர் தனுசின் வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அதன் பேரில் யாத்ரா ஹெல்மெட் அணியாமல் போக்குவரத்து விதிகளை மீறி இருசக்கர வாகனம் ஓட்டியதாக கூறி ரூ.1,000 அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.