Share via:
சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல் நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமைச்சர் செந்தில்பாலாஜி சட்டவிரோத பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் மாதம் 13ம் தேதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். அப்போது அவர் திடீரென்று நெஞ்சுவலிக்கிறது என்று கூறியதால், ஓமந்தூரார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
செந்தில் பாலாஜியை மருத்துவர்கள் பரிசோதித்த நிலையில், அவருக்கு இதயத்தில் 3 அடைப்பு இருப்பதாக தெரிவித்த நிலையில் இதனை இ.எஸ்.ஐ.மருத்துவர்களும் உண்மை என்று உறுதி செய்தனர். உயர்நீதிமன்றத்தின் அனுமதியுடன் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சென்னை ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள காவேரி மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்ட செந்தில்பாலாஜிக்கு அடிக்கடி மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதைத்தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ரத்த அழுத்த பிரச்சினை காரணமாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு செந்தில் பாலாஜி அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
செந்தில்பாலாஜி தனக்கு தலைசுற்றுவதாக சிறை நிர்வாகத்திடம் தெரிவித்த போது அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அன்று இரவு மேல் சிகிச்சைக்காக ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
தூக்கமின்மை, பசியின்மை, தீவிர தலைவலி, வாந்தி உள்ளிட்ட பிரச்சினைகள் தனக்கு இருப்பதாக மருத்துவர்களிடம் அமைச்சர் தெரிவித்த நிலையில், 8 கிலோ எடை குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருக்கு சிடி ஸ்கேன் மற்றும் சில ரத்த பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. தினந்தோறும் 11 மாத்திரைகளை உட்கொள்ளும் செந்தில் பாலாஜி அதற்கு தகுந்தவாறு உணவு உட்கொள்ளாமல் இருப்பதும், ஒரு நாளைக்கு 2 மணிநேரம் மட்டுமே தூங்குவதும், தீவி மன அழுத்தத்துடன் இருப்பதும்தான் அனைத்து உடல்நல பிரச்சினைக்கும் காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
இந்நிலையில் இன்று அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு இன்று எடுக்கப்படும் பரிசோதனைகளின் முடிவை பொறுத்தே அடுத்த கட்ட சிகிச்சைகள் குறித்து மருத்துவக்குழு அடுத்தகட்ட சிகிச்சைகளை மேற்கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஏற்கனவே தனது உடல்நிலையை காரணம் காட்டி ஜாமீன் வழங்கக் கோரிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனுக்கள் தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.