Share via:
பஞ்சாப் துணை முதலமைச்சர் சுக்பீர்சிங் பாதலை மர்ம நபர் ஒருவர் பொற்கோவிலில் வைத்து துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் பொற்கோவில் அமைந்துள்ளது. இங்கு அம்மாநிலத்தின் துணை முதலமைச்சரும், சிரோமணி அகாலி தள தலைவருமான சுக்பீர்சிங் பாதல், சீக்கிய மதம் தமக்கு அளித்த தண்டனையை நிறைவேற்றும் வகையில் ஈட்டியுடன் காவல் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுகபீர்சிங் பாதலை நோக்கி சுட்டார்.
அவர் கீழே குனிந்து துப்பாக்கியின் தோட்டாவில் இருந்து நூலிழையில் உயிர் தப்பினார். துப்பாக்கிசூடு நடத்தியவரை அங்கிருந்த பாதுகாவலர்கள் எகிறிப் பிடித்து, அடுத்ததாக துப்பாக்கியால் சுடாதவாறு தடுத்து நிறுத்தினர். துப்பாக்கிசூடு சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் தொற்றிக் கொண்டது.
இதைத்தொடர்ந்து துப்பாக்கிசூடு நடத்திய மர்ம நபரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதன் அடிப்படையில் அவரது பெயர் நாராயணன்சிங் சவுரா என்று தெரியவந்துள்ளது.
அகாலிதளம் கட்சியின் முந்தைய ஆட்சி காலத்தில் செய்த தவறுகளுக்காக சுக்பீர்சிங் பாதலுக்கு, சீக்கிய அமைப்பு மத தண்டனை விதித்தது. அதன்படி அவர் பொற்கோவிலில் தூய்மை மற்றும் காவல்பணிகளை மேற்கொண்டார். இந்த நேரத்தில்தான் சுக்பீர்சிங் பாதல் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.