Share via:
அன்புமணி இல்லாமல் தனியே அம்பேத்கர் பிறந்த
நாளை கொண்டாடி பதிவு வெளியிட்டுள்ளார் டாக்டர் ராமதாஸ். இந்த நிலையில் டெல்லி பா.ஜ.க.வின்
எச்சரிக்கையை ராமதாஸிடம் தெரிவிக்கவே சைதை துரைசாமி சந்திப்பு நடந்ததாக சொல்லப்படுகிறது.
அமித்ஷா முன்னிலையில் எடப்பாடி பழனிசாமி,
அன்புமணி ராமதாஸ் ஆகிய இருவரையும் மேடையேற்றி கூட்டணி அறிவிப்பு வெளியிடுவதே திட்டமாக
இருந்தது. ஆனால், பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்பது டாக்டர் ராமதாஸ்க்கு உடன்பாடு இல்லை.
ஆகவே, அன்புமணியின் பதவியைப் பறித்தார். இதையடுத்து பா.ம.க. பொதுக்குழுவை கூட்டுவது
குறித்து முக்கிய நிர்வாகிகளுடன் ராமதாஸ் நேற்று தைலாபுரம் தோட்டத்தில் ஆலோசனை நடத்தினார்.
தைலாபுரம் தோட்டத்தில் உள்ள ராமதாஸ் வீட்டில்
அவரது மகள்கள் ஸ்ரீ காந்தி, கவிதா குடும்பத்தினரும், சென்னை இசிஆர் பனையூரில் உள்ள
அன்புமணி வீட்டில், அவரது மனைவி சவுமியா, மருமகன் உள்ளிட்டோரும் ஆலோசனை நடத்தினர்.
பொதுக்குழு உறுப்பினர்கள் அன்புமணியின் ஆதரவாளர்களாக இருப்பதால் தன்னுடைய பதவிப் பறிப்பு
செல்லுபடியாகாது என்று அறிவித்து டாக்டர் ராமதாஸை ஓரம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுத்துவருகிறார்.
இதைத்தொடர்ந்து அன்புமணி, ‘பொதுக்குழு கூட்டி
தேர்தெடுக்கப்பட்ட நானே பாமக தலைவராக தொடர்வேன். 2026 சட்டமன்ற தேர்தலில் வலிமையான
கூட்டணி அமைப்பது எனது கடமை’ என்று கூறியிருந்தார். இதன் மூலம் தந்தை – மகன் இடையே
நடக்கும் அதிகார மோதல் உச்சகட்டத்தை அடைந்தது வெட்ட வெளிச்சமானது. இதனால் பாமகவில்
பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து டாக்டர் ராமதாஸ் தைலாபுரத்துக்கு
ஜி.கே.மணியை மட்டும் வரவழைத்துப் பேசினார். அதன்பிறகு மீடியாவிடம், ‘ராமதாசும், அன்புமணியும்
விரைவில் ஒன்றாக இணைந்து மாநாடு நடத்துவார்கள்’ என்று மட்டும் கூறிவிட்டு ஓடினார்.
இதையடுத்து, தைலாபுரம் தோட்டத்துக்கு பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி, தலைமை நிலைய செயலாளர்
அன்பழகன், வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி, ஆடுதுறை சேர்மன் ஸ்டாலின், விழுப்புரம்
மாவட்ட செயலாளர் ஜெயராஜ் உள்பட 12 நிர்வாகிகளை ராமதாஸ் சந்தித்துப் பேசி அன்புமணிக்கு
ஆதரவு கொடுக்ககூடாது என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்.
இந்நிலையில், அதிமுகவில் பிரிந்த தலைவர்கள்
ஒன்றிணைய வேண்டும், அதிமுக-பாஜ கூட்டணி மீண்டும் அமைய வேண்டும் என்று சமீபத்தில் குரல்
கொடுத்த முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமி தோட்டத்தில் டாக்டர் ராமதாஸை சந்தித்துப்
பேசினார். ‘அரசியல் சந்திப்பு இல்லை’ என்று சைதை துரைசாமி தெரிவித்துவிட்டார் என்றாலும்,
உண்மையில் மத்திய அரசின் எச்சரிக்கையைத் தெரிவிக்கவே சைதை துரைசாமி வந்ததாக ராமதாஸ்
அபிமானிகள் தெரிவிக்கிறார்கள்.
டெல்லி பா.ஜக.வினர் அன்புமணியின் தலைமையை
விரும்புகிறார்கள். எனவே, அப்படியே நடக்கவேண்டும் என்பதைத் தெரிவிக்கவே சைதை துரைசாமி
வந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், டாக்டர் ராமதாஸ் அசைந்துகொடுப்பதாகத் தெரியவில்லை
என்பதையே இன்றைய அம்பேத்கர் பிறந்த நாள் விழா காட்டுகிறது.