Share via:
மணிப்பூர் மாநிலத்தை பதற்றம் நிறைந்த மாநிலமாக அம்மாநில உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின அந்தஸ்து தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே எழுந்த மோதல் கலவரமாக வெடித்தது. இதன் தொடர்ச்சியாக வன்முறை வெடித்த நிலையில் நிலைமை கட்டுக்குள் வராததால் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, இணைய சேவையும் துண்டித்து வைக்கப்பட்டுள்ளது.
பழங்குடியின அந்தஸ்து விவகாரம் தொடர்பாக இரு சமூகத்தினருக்கும் இடையில் கலவரம் மூண்டு உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. இதில் பெண்கள் இருவர் நிர்வாணமாக்கப்பட்டு சாலையில் அடித்து இழுத்து செல்லப்பட்டு பாலியல் வன்புனர்வுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி நாட்டையே கொதித்தெழச் செய்தது. இது குறித்து மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு வாய் திறக்காதது ஏன் என எதிர்க்கட்சியினர் கேள்விக்கணைகளை தொடுத்தனர்.
மணிப்பூரில் நடைபெற்ற கலவரத்தில் இதுவரை 120 பேர் உயிரிழந்த நிலையில் ஏராளமான வழிபாட்டு தலங்களும், வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டது. இருப்பினும் தற்போது வரை மணிப்பூரில் ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது.
இந்நிலையில் மணிப்பூரில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் 19 காவல்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளைத் தவிர்த்து பிற பகுதிகள் அனைத்தும் பதற்றம் நிறைந்த பகுதி என அம்மாநில உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அடுத்த 6 மாதங்களுக்கு இந்த உத்தரவு நீடிக்கும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த 19காவல்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளை தவிர்த்து மற்ற பகுதிகளில் முக்கிய முடிவுகளை ஆளுநரே எடுப்பார் என்றும் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வருகிற அக்டோபர் மாதம் 1ம் தேதி முத்ல நடைமுறைக்கு கொண்டு வரப்பட உள்ளது.
ஆயுதப்படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம் என்பது இந்திய ஆயுதப்படைகள் மற்றும் மாநில மற்றும் துணை ராணுவப் படைகளுக்கு ‘‘பதற்றமான பகுதிகள்’’ என வகைப்படுத்தப்பட்ட பகுதிகளில் சிறப்பு அதிகாரங்களை வழங்கும் சட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
19 காவல்நிலையங்களுக்கு உட்பட்ட இடங்களை தவிர பிற பகுதிகளில் வன்முறையை தடுக்க அம்மாநில ஆளுநர் என்ன நடவடிக்கைகளை எடுக்கப் போகிறார் என்பது குறித்து அரசியல் விமர்சகர்களும், சமூக ஆர்வலர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.