Share via:
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி தற்போது வேலூர் சி.எம்.சி.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு மின்னஞ்சலில் கொலை மிரட்டல் வந்ததாக
கூறப்படும் விவகாரம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
முதல்வர் ஸ்டாலினின் சகோதரர் மு.க அழகிரியின் மகன் துரை தயாநிதி திரைப்பட தயாரிப்பாளராகத்
திகழ்ந்தவர். சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் அனுஷாவை திருமணம் செய்திருக்கும் துரை
தயாநிதிக்கு ருத்ர தேவ் மற்றும் வேதாந்த் என இரண்டு மகன்கள் உள்ளனர்.
சென்னை போயஸ் கார்டனில் வசித்துவந்த துரை தயாநிதி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திடீரென
வீட்டில் மயங்கி விழுந்தார். சென்னை அப்போலோ மருத்துவமனையில் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள்
அவருக்கு மூளையிலுள்ள ரத்தக் குழாயில் அடைப்பு இருப்பதை உறுதி செய்தனர். அதனை தொடர்ந்து,
உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூரில்
உள்ள சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், சிஎம்சி மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு ஒரு மின்னஞ்சல்
மூலமாக கொலை மிரட்டல் குறிப்பு வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சைபர் குற்றப்பிரிவு
காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். அதேநேரம், துரை தயாநிதி சிகிச்சை பெற்று வரும்
சிஎம்சி ஏ-பிளாக்குக்கு கூடுதலாக ஓர் உதவியாளர் தலைமையில் 3 காவலர்கள் சீருடை அணியாமல்
பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக அழகிரியின் ஆதரவாளர்களிடம் பேசுகையில், ‘’முதல்வர் ஸ்டாலின் நேரில்
வந்து சந்தித்துவிட்டு சென்ற பிறகு பல்வேறு அமைச்சர்கள் உள்ளிட்ட தி.மு.க.வின் முக்கியப்
பிரமுகர்கள் மருத்துவமனைக்கு படையெடுத்து வருகிறார்கள். இந்த விசிட்டர்களை நிறுத்துவதற்காகவே
இப்படி தகவல் பரப்பி அவருக்கு பாதுகாப்பு கொடுக்கிறார்கள் என்று நினைக்கிறோம். துரை
தயாநிதிக்கு கொலை மிரட்டல் விடுவதற்கு வாய்ப்பு இல்லை’’ என்கிறார்கள்.
காவல் துறையினரும் கொலை மிரட்டலில் எப்படிப்பட்ட வாசகங்கள் இருந்தன என்பதை சொல்ல
மறுப்பதையும் பார்க்கும்போது, பாதுகாப்பு ஏற்பாடுகள் என்றே தோன்றுகிறது.