Share via:
உதயநிதியின் சனாதன பேச்சுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணிக்
கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில் தயாநிதி மாறனின் பழைய வீடியோ பேச்சு
இப்போது வைரலாகிவருகிறது.
அதாவது, ’உத்தரபிரதேசம், பிகார் மாநிலங்களில் இந்தி மொழி மட்டும்
கற்றவர்கள், எங்களுடைய தமிழ்நாட்டுக்கு கட்டிடங்கள் கட்டவும், கழிவறைகளை சுத்தம் செய்யவும்தான்
வருகின்றனர்’ என்று பேசியிருந்தார். இது இப்போது இந்தியா முழுக்க எதிரொலிக்கிறது.
தமிழக தலைவர்கள் பேசும் பல விவகாரங்கள் இந்திய அளவில் பெரும்
எதிர்ப்பை சம்பாதித்து வருகிறது. சமீபத்தில் நாடாளுமன்றத்தில், திமுக எம்.பி. செந்தில்குமார்,
‘பசு கோமிய’ மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றதாக கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார். ஸ்டாலின் தலையிட்டு
கண்டித்த பிறகு அவர் மன்னிப்பு கேட்டார்.
இந்த நிலையில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் இந்தி பேச்சுக்கு
மொழிபெயர்க்க வேண்டும் என்று கூறிய டி.ஆர்.பாலு அந்த இடத்திலேயே கண்டிக்கப்பட்டார்.
அதோடு, ’இந்தி நம் தேசிய மொழி. தேசிய மொழியை அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
எனவே, நீங்கள் இந்தி கற்றுக் கொள்ளுங்கள்’ என்று நிதிஷ் கூறி சர்ச்சையை கிளப்பினார்.
இந்த நேரத்தில்தான், வடமாநிலத்தவர் தமிழகத்தில் கழிவறை வேலைக்குத்தான்
வருகிறார்கள் என்று தயாநிதி மாறன் முன்பு பேசிய வீடியோ வைரலாகியுள்ளது.
தயாநிதி மாறனின் இந்த பேச்சுக்கு பீகார் துணை முதல்வரும், ராஷ்ட்ரிய
ஜனதா தளம் தலைவருமான தேஜஸ்வி யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார். ‘‘எந்த கட்சி தலைவராக
இருந்தாலும் சரி, இதுபோன்ற கருத்துகள் தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும். இந்தியா ஒரே
நாடு. மற்ற மாநில மக்களை நாங்கள் மதிக்கிறோம். அதேபோலதான் அனைவரும் இருக்க வேண்டும்
என எதிர்பார்க்கிறோம்’’ என்று அவர் கூறியுள்ளார்.
பீகாரைச் சேர்ந்த பி.ஜே.பி. தலைவர் கிரிராஜ் சிங், ’பீகார் மக்கள்
கடினமாக உழைக்கின்றனர். தன்மானத்துடன்உழைப்பது குற்றம் அல்ல. மாநிலத்தின் வளர்ச்சிக்கு
அவர்கள் பங்களிக்கின்றனர். சனாதனத்தை ஒழிப்போம் என்று கூறியவர்கள், இப்போது தொழிலாளர்களை
புண்படுத்தியுள்ளனர்…’ என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
பழைய வீடியோவை பா.ஜ.க. திட்டமிட்டு பரப்பிவருகிறது என்று தி.மு.க.
விளக்கம் அளித்துவரும் நிலையில், தயாநிதி மாறன் அமைதி காத்துவருகிறார். இதற்கு மன்னிப்பு
கேட்பாரா என்பதுதான் கேள்வியாக நிற்கிறது.