Share via:
தருமை ஆதீனம் 27வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தமிழக அரசுக்கு ஓதுவார்கள் நியமனம் குறித்த வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது.
தமிழகத்தில் யாரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தை தமிழக அரசு அமலுக்கு கொண்டு வந்து ஓதுவார் பயிற்சி முடித்தவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி வருகிறது.
இந்நிலையில் ஓதுவார்கள் நியமனம் குறித்து தருமை ஆதீனம் தமிழக அரசுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில், ‘‘தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நியமனம் செய்யப்பட்டுள்ள ஓதுவார்களில் ஒரு சிலர் முழுநேரமாக முறையாக கற்று தேர்ந்தவர்கள் இல்லை எனவும் 5 ஆண்டுகள் முழுமையாக பயிற்சி பெற்றவர்களை இந்த நியமனம் பாதிக்கும்படி உள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும் தவறான நியமனமாக இதை கருதுவதுடன், தவறான முன்னுதாரணமாகவும் அமைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழுமையாக 5 ஆண்டுகள் தேவார பாடசாலைகளில் பயின்றவர்களை மட்டுமே இதற்கு முன்னர் ஓதுவாராக முன்னர் பணி நியமனம் செய்துவந்த நிலையில் குறைந்து அளவிலேயே அவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டது. அதோடு மட்டுமல்லாமல் இதற்கு முன்னர் 4 ஆண்டுகள் பல்கலைக்கழகத்திலும் 3 ஆண்டுகள் இசைப்பள்ளியிலும் முழுநேரமாகப் பயின்றவர்களை நியமனம் செய்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து தமிழக திருக்கோவில்களில் ஓதுவார் பணிக்குரிய தரமான தகுதியான நியமனங்களையே தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை குறித்து தமிழக அரசும், இந்து அறநிலையத்துறை சார்பில் உரிய விளக்கம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.