Share via:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு இன்று (அக்டோபர் 4) கொடியேற்றத்துடன் தொடங்கிய பிரம்மோற்சவ விழா 9ம் நாட்கள் தொடர்ந்து நடக்கும். அதாவது வரும் 12ம் தேதி வரை ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்காரங்களுடன் கூடிய சிறப்பு வழிபாடு நடக்க உள்ளது.
பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையானுக்கு முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் பிரம்மோற்சவ விழாவின் முத்தாய்ப்பாக கொடியேற்றத்துக்கான கயிறை கொடிமரத்தின் உச்சியில் பொருத்தும் பணி நடந்து கொண்டிருந்த போது, தங்கக்கொடி மரத்தின் வளையம் உடைந்ததாக தெரியவந்துள்ளது. அதனை சீர் செய்யும் பணியில் தேவஸ்தான அதிகாரிகளும், ஊழியர்களும் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பதி கோவிலை சுற்றி பல சர்ச்சைகள் வலம் வரும் நிலையில் தங்கக்கொடி மரம் சேதடைமடைந்துள்ள தகவல் பக்தர்கள் அனைவரையும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. இது ஆந்திர மாநிலத்திற்கான அபசகுணமாக இருக்குமோ என்றும், கோவிலில் தோஷம் கழிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட பூஜைகள் பலன் அளிக்கவில்லையோ என்று பக்தர்கள் முணுமுணுக்கத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.