Share via:

அது ஒரு காலம். போயஸ் தோட்டத்து வாசலில் டெல்லி தலைவர்கள் கால்
கடுக்க காத்திருந்தார்கள். ராமதாஸ், வைகோ தொடங்கி எல்லா கூட்டணித் தலைவர்களும் ஜெயலலிதாவை
பார்க்க வரிசையில் நிற்பார்கள். ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மெகா கூட்டணி
அமைக்கப்படும் என்று எடப்பாடி தொடர்ந்து பேசி வருகிறார் என்றாலும் ஒரே ஒரு கட்சி கூட
இதுவரை தானே முன்வந்து பேசவில்லை. தி.மு.க. கூட்டணியும் உடைவது போல் தெரியவில்லை.
இப்போது எஸ்.டி.பி.ஐ., புரட்சி பாரதம் ஆகிய இரண்டு குட்டிக்
கட்சிகள் மட்டுமே பட்டியலில் இருக்கின்றன. இந்த நிலை நீடிப்பது ஆபத்து என்று கருதிய
எடப்பாடி பழனிசாமி, நேரடியாகவே பா.ம.க.வை கூட்டணிக்கு இழுக்கும் பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டார்.
அதன்படி, ராமதாஸை சி.வி.சண்முகம் சந்தித்துப் பேச்சுவார்த்தை
நடத்தியிருக்கிறார். ராமதாஸுக்கும் சி.வி.சண்முகத்துக்கும் எக்கச்சக்க பகை இருக்கிறது
என்று தெரிந்தபிறகும், வேறு வழியின்றி அவரையே அனுப்பியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
முன்பு சி.வி. சண்முகத்திற்கு எதிராக கொலை முயற்சி நடந்தபோது,
சண்முகத்தின் உறவினர் ஒருவர் கொல்லப்பட்டார். இந்த கொலைக்கு ராமதாஸ் உறவினர்கள் காரணம்
என்று வழக்கு இன்னமும் நடந்துவருகிறது. இந்த நிலையில் வேறு வழியே இல்லாமல் சி.வி.சண்முகம்
நேரடியாக தைலாபுரத் தோட்டத்துக்குச் சென்று ராமதாஸை சந்தித்துப் பேசியிருக்கிறார்.
பா.ஜ.க.வுடன் பா.ம.க. நடத்திய பேச்சுவார்த்தை சுமுகமாக முடியவில்லை
என்பதை அறிந்த பிறகே சி.வி.சண்முகம் சென்றதாக கூறப்படுகிறது.
பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. 12 மக்களவைத் தொகுதிகளையும், ஒரு
ராஜ்ய சபா இடத்தையும் பாமக கேட்டுள்ளது. ஆனால், 7 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முடியும்
என்று பா.ஜ.க. கூறியதாலே அதிருப்தியில் இருக்கிறார்களாம். இந்த நிலையில் கூடுதல் சீட்
குறித்து பேசிக்கொள்ளலாம் என்று சண்முகம் உறுதி கொடுத்திருக்கிறாராம்.
பேரம் ஆரம்பமாகட்டும்.