Share via:
பரபரப்பான சாலைகள் மற்றும் குறுக்கு தெருக்களில் கால்நடைகள் அதிகளவில் நடமாடுகிறது. அவை சாலைகளில் நடந்து செல்பவர்களையும், வாகன ஓட்டிகளையும் முட்டி தாக்குகிறது. இதனால் சில உயிரிழப்புகளும், பலத்த காயங்களும் ஏற்படுகிறது.
கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் சென்னை அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனியில் பள்ளி முடித்து தாயுடன் சென்ற சிறுமியை 2 மாடுகள் ஆக்ரோஷமாக தாக்கியது. அப்போது மாடுகளிடம் இருந்து சிறுமியை காப்பாற்ற நீண்ட நேரம் முயற்சித்து பின்னர் மீட்டனர். இது குறித்த பரபரப்பான காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலானது.
இதைத்தொடர்ந்து சென்னை மாநகராட்சி சார்பில், சென்னை சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள் முதல் முறை பிடிபடும் பட்சத்தில் அதன் உரிமையாளர்களுக்கு 10,000 ரூபாய் அபராதம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே மாடு இரண்டாவது முறையாக பிடிபட்டால், அதன் உரிமையாளருக்கு அபராதம் உயர்த்தப்பட்டு 15,000 ரூபாய் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பராமரிப்பு செலவுக்காக தலா ஒரு மாடுக்கு என்று ஆயிரம் ரூபாயும் வசூலிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த அபராதம் உயர்வு மூலமாக சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளின் எண்ணிக்கை கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.