கோர்ட்டாவது …யிராவது என்று நீதிமன்றத்தைக் கேவலமாகப் பேசிய ஹெச்.ராஜாவுக்கு இன்று நீதிமன்றம் 6 மாதம் சிறைத் தண்டனை கொடுத்து அதிரடித் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

தமிழக பா.ஜ.க.வின் ஒருங்கிணைப்பு குழு தலைவராக இருக்கும் ஹெச்.ராஜா கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பெரியார் சிலையை உடைப்பேன் என்று ட்விட்டரில் பதிவு செய்தது தொடர்பாகவும், தி.மு.க. எம்.பி கனிமொழிக்கு எதிராக தரக்குறைவாக கருத்து கூறியதாகவும் பல்வேறு காவல் நிலையங்களில் தி.மு.க., காங்கிரஸ், பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் புகார்கள் அளிக்கப்பட்டன.

இந்த புகாரில் ஈரோடு நகர் காவல் துறை, கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் ராஜாவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஹெச். ராஜா தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் மூன்று மாதங்களில் இரண்டு வழக்கின் விசாரணையையும் முடிக்க சென்னை எம்.பி., எம்.எல்.ஏ. மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.

இதையடுத்து வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி. ஜெயவேல் முன் நடைபெற்றது. பெரியார் சிலை உடைக்க வேண்டும் என கூறியதற்கான ஆதாரங்கள் சேகரிக்கப்படவில்லை எனவும், எம்.பி. கனிமொழி மீதான கருத்து அரசியல் ரீதியான கருத்து என்றும், அதிலும் அவர் புகார் அளிக்காத நிலையில், மூன்றாம் நபர் அளித்த புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் வழக்கில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் எனவும் ஹெச். ராஜா வாதிட்டார். இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு வழக்கின் தீர்ப்பை கடந்த மாதம் 14ஆம் தேதி தள்ளி வைத்த நீதிபதி ஜெயவேல், இந்த இரண்டு வழக்குகளிலும் இன்று தீர்ப்பு வழங்கினார்.

தீர்ப்பில், ஹெச். ராஜா மீதான புகார் காவல்துறை தரப்பில் நிரூபிக்கப்பட்டுள்ளது எனவும், சம்பந்தப்பட்ட இரு பதிவுகளும் ஹெச். ராஜாவின் சமூக வலைதள பக்கத்தில் இருந்து அனுப்பப்பட்டது என்பதை இந்த நீதிமன்றம் தீர்மானிக்கிறது என்று குறிப்பிடப்பட்டது. எனவே ஹெச். ராஜா குற்றவாளி என கருதப்படுகிறார் என்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயவேல் தீர்ப்பு அளித்துள்ளார். மேலும், எச்.ராஜாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பளிக்கப்பட்டது. இரண்டு வழக்கில் தனித்தனியாக 6 மாதம்  சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த வழக்கில் மேல்முறையீடு செய்வதற்கு வாய்ப்பு இருப்பதால் இப்போது ஹெச்.ராஜா தப்பித்தாலும், நிரந்தரமாக தப்பிக்க முடியாது என்பது உண்மை. இனி, பா.ஜ.க.வினர் கொஞ்சம் அடக்கியே வாசிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link