தமிழகத்தையே உலுக்கிய கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணத்தின் ஓலம் இன்னும் அடங்கவில்லை. கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் தெருவுக்கு தெரு இறுதிச்சடங்குகள் நடந்து பார்ப்பவர்களை கலங்கச் செய்தது.

 

இதற்கிடையில் விஷசாராயம் விவகாரம் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்ட நிலையில், பல அரசு உயர் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டும் சஸ்பெண்டும் செய்யப்பட்டனர்.

 

மருத்துவமனையில் போதிய மாற்று மருந்து மற்றும் உள்கட்டமைப்புகள் இல்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் குற்றம்சாட்டினர்.

 

மக்களின் வரிப்பணத்தை விஷசாராயம் குடித்து பலியானவர்களின் குடும்பத்திற்கு எவ்வாறு கொடுக்கலாம் என்றும் பல்வேறு தரப்பினர் இணையதளம் வாயிலாக தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். மேலும் விஷசாராயம் மரணம் தொடர்பாக சி.பிஐ. விசாரணை வேண்டும் என்று வலியுறுத்திய நிலையில், தமிழக அரசு சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டு தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகின்றன.

 

இந்நிலையில் 65 பேரை காவு வாங்கிய விஷசாராயத்தின் ஆய்வக அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் விஷசாராயத்தில் தண்ணீரில் 10% அளவுக்கு மெத்தனால் கலக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தண்ணீரில் 4.5% அளவுக்கு மெத்தனால் கலந்திருந்தாலே அது உயிரை பாதிக்கும். இந்த அளவு இருமடங்காக இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கடந்த 2023ம் ஆண்டு மரக்காணம் பகுதியில் விஷசாராயம் குடித்து பலர் பலியான நிலையில் அதில் 16% மெத்தனால் கலந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link