Share via:
புயல், வெள்ளம், கொரோனா போன்ற இயற்கை பேரிடர்களை நாங்கள் பார்த்தவர்கள்.
கொரோனா ஸ்டாலின் காலத்தில் வந்திருந்தால், அவரே போய்ச் சேர்ந்திருப்பார் என்று முதல்வர்
ஸ்டாலினைப் பார்த்து கடுமையாக விமர்சனம் செய்தார் எடப்பாடி பழனிசாமி.
இதற்கு கனிமொழி, ‘’எங்களை எதிர்த்தவர்களுக்கு எல்லாம் மலர் வளையம்
வைத்தவர்கள் நாங்கள்’’ என்று நேரடியாகத் தாக்கியிருக்கிறார்.
இதையடுத்து திமுகவினர், ’’கஜா புயலின் போது மக்களுக்கு உதவாமல்
ஓடி ஒளிந்து மாமியார் இல்லத்தில் விருந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த அடிமை ஆட்சியில்
கூட, கொரோனா காலத்தில் மக்களின் துயர் துடைக்க தி.மு.கழகம் ஒன்றிணைவோம் வா என்று தமிழ்நாடு
முழுவதும் கழகத் தலைவரின் தலைமையில் களப்பணியாற்றியது. அப்போது மக்களை காக்க களத்தில்
பணியாற்றிய கழகத்தின் செயல்வீரர் ஜெ.அன்பழகன் அவர்களை இழந்த இயக்கம் திமுக.
இன்று அவருடைய மாவட்ட மண்ணில் நின்று கொண்டு அடிமை பழனிசாமி, தான்
ஒரு கட்சியின் தலைவர் முன்னாள் முதல்வர் என்பதை மறந்து தரங்கெட்டு தமிழ்நாட்டின் முதலமைச்சர்
அவர்களை “கொரோனாவில் போயிருப்பார்” என்று வெறுப்பைக் கக்கியுள்ளார். மக்களைக்
காக்க தன் உயிரைத் துச்சமென நினைத்து கொரோனாவில் பாதிக்கப்பட்டு இருந்த மக்களை நேரில்
சென்று மருத்துவமனையில் பார்த்து நலம் விசாரித்த ஒப்பற்ற தலைவர் திரு.முத்துவேல் கருணாநிதி
ஸ்டாலின் அவர்கள். களநிலவரமும், தேர்தல் முடிவுகள் குறித்த கருத்துக்கணிப்புகளால் விரக்தியின்
உச்சிக்கே சென்ற முதுகெலும்பு இல்லாத அடிமைசாமிக்கு தமிழ்நாட்டு மக்கள் இந்தத் தேர்தலில்
தக்க பாடம் புகட்டப் போவது உறுதி.’’ என்று கொதிக்கிறார்கள்.
இதற்கு பாஜகவினர், ‘’’எடப்பாடி – டெட்பாடி’ என்றும், விட்டிருந்தால்
காலுக்கு உள்ளேயும் போயிருப்பார் என்று அன்றைய முதலமைச்சரை தரக்குறைவாக, அநாகரீகமாக
உதயநிதி ஸ்டாலின் விமர்சித்த போது தெரியவில்லையா நாகரீகமும், சுயமரியாதையும்? மானமும்,
மரியாதையும், நாகரீகமும், பண்பும், அன்பும் கிலோ என்ன விலை என்று கேட்க அருகதையிருக்கிறதா
திமுகவினருக்கு?’’ என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
அநாகரிகத்தின் பக்கம் போகிறது தேர்தல் களம்.