Share via:
ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி தொடர் விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது.
அக்டோபர் 11ம் தேதி சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜையும், அக்டோபர் 12ம் தேதி (சனிக்கிழமை) விஜயதசமியும் கொண்டாடப்பட உள்ளது. அதைத்தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை வருவதால் தொடர்ந்து விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் என அனைத்துக்கும் விடுமுறை என்பதால், பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர்.
அந்த வகையில் தமிழக அரசு பயணிகள் சிரமமின்றி கூட்ட நெரிசலின்றி பயணம் மேற்கொள்ள சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.
அதன்படி அக்டோபர் 9ம் தேதி (சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து (புதன்கிழமை) கிளாம்பாக்கத்தில் இருந்து 225 பேருந்துகளும், 10ம் தேதி (வியாழக்கிழமை) 880 பேருந்துகளும் கூடுதலாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் கிளாம்பாக்கத்தில் இருந்து அக்டோபர் 9ம் தேதி திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட இடங்களுக்கு 225 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அக்டோபர் 9ம் தேதி கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை உள்ளிட்ட இடங்களுக்கு 35 பேருந்துகளும், 10ம் தேதி கோயம்பேட்டில் இருந்து அதே வழித்தடங்களுக்கு 265 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதேபோல் பெங்களூர், திருப்பூர் ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு செல்லும் வகையில் மொத்தம் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அக்டோபர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் மாதவரத்தில் இருந்து 110 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.